மாதவரம் காளிகம்பாள் நகர், அருகே தனிநபா் புதிதாக கட்டிடம் கட்டி வருகிறார். தரைதளத்தில் கடைகளும், முதல் தளத்தில் வீடு கட்டப்படுகிறது. இந்த கட்டிடம் கட்டுவதற்கு சென்னை மாநகராட்சியில் அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிக்கு புகார் சென்றது.

இதையடுத்து, மாதவரம் மண்டல அதிகாரி, முறையாக அனுமதி பெற்று கட்டிடம் கட்ட வேண்டும் என அதிகாரிகள், சம்பந்தப்பட்ட கட்டிட உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பினர். ஆனால் எவ்வித  அனுமதியும் இல்லாமல், கட்டிட கட்டுமான பணி நடந்தது.

இந்நிலையில் மாதவரம் மண்டல அதிகாரி தேவேந்திரன் தலைமையில், செயற்பொறியாளர் ராமமூர்த்தி, உதவி செயற்பொறியாளர்கள் தேவேந்திரன், சதீஷ், மற்றும் மாதவரம் பால் பண்ணை போலீசார், மாநகராட்சி ஊழியர்கள் நேற்று முன்தினம் காலை மேற்கண்ட பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனா்.

அப்போது, மாநகராட்சியின் அனுமதியின்றி கட்டிடம் கட்டப்படுவது தெரிந்தது. இதையடுத்து, அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கட்டிடத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.