சென்னை தாம்பரம் அருகே பள்ளி மாணவர் தாறுமாறாக கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. 

தாம்பரம் அடுத்த கேம்ப் ரோடு- மப்பேடு சாலையில் கார் ஒன்று அதிவேகத்தில் சீறிப் பாய்ந்தது. சாலை ஓரம் வைக்கப்பட்டிருந்த இரும்புத் தடுப்பு மீது மோதிக்கொண்டு வேகமாக சென்றது. கண்ணிமைக்கும் நேரத்தில் முன்னால் சென்று கொண்டிருந்த இரு இருசக்கர வாகனங்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் விபத்தில் ஒரு பெண் உள்பட 4 பேர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். இதனையடுத்து 4 பேரையும் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியவன், 18 வயது நிரம்பாத பள்ளி சிறுவன் என்பது தெரிவந்துள்ளது. இதுகுறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த சிறுவனை காரை எடுத்துச் செல்ல அனுமதித்த அவனது பெற்றோருக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.