கொரோனா ஊரடங்கால் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த கால அட்டவணைப்படி நடத்த முடியாமல் போனது. கொரோனா அச்சுறுத்தலாலும் ஊரடங்கு அமலில் இருப்பதாலும் பொதுத்தேர்வு நடத்த முடியாமல் தள்ளிப்போய்க் கொண்டிருந்த நிலையில், ஜூன் ஒன்றாம் தேதி முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. 

கொரோனா எதிரொலியால் தனிமனித இடைவெளியை மாணவர்கள் கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. தேர்வறையில் மாணவர்கள் இயல்பாகவே இடைவெளி விட்டுத்தான் அமரவைக்கப்படுவார்கள். எனினும் மாணவர்களுக்கான போக்குவரத்து வசதி குறித்தெல்லாம் கேள்விகளும் விவாதங்களும் எழுந்தன.

தமிழ்நாட்டில் 9.55 மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதவுள்ளனர். ஏற்கனவே 3826 தேர்வு மையங்கள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக அமைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், 10ம் வகுப்பு மாணவர்கள், அந்தந்த பள்ளிகளிலேயே பொதுத்தேர்வு எழுதலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

ஒரு தேர்வறையில் 10 மாணவர்கள் மட்டுமே அமரவைக்கப்படுவார்கள் என்றும், 10ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வுகளை தங்களது பள்ளிகளிலேயே எழுதலாம் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

தமிழ்நாட்டில் சுமார் 12 ஆயிரம் பள்ளிகள்(உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி) உள்ளன. அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வெழுதலாம் என்பதால், தேர்வு மையத்தை தேடிச்செல்ல வேண்டிய அவசியம் இல்லை. தங்களுக்கு பழக்கப்பட்ட தங்களது பள்ளிகளிலேயே தேர்வு எழுதுவது மாணவர்களுக்கு வசதியாகவும் இருக்கும். பொதுத்தேர்வு வரலாற்றில் இதற்கு முன் இப்படி நடந்ததில்லை. இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.