பிரதமர் மோடியின் ரோடு ஷோவில் பள்ளி குழந்தைகள்... உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு..!
கோவையில் கடந்த மார்ச் 18ம் தேதி பிரதமர் மோடியின் ரோடு ஷோ நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சாய்பாபா வித்யாலயம் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்களை சீருடைகளிலேயே அழைத்துச் சென்றதாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
பிரதமர் மோடியின் கோவை நிகழ்ச்சிக்கு பள்ளிக் குழந்தைகள் அழைத்துச் செல்லப்பட்டததாக பெற்றோர் புகார் அளித்தார்களா என விளக்கம் அளிக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவையில் கடந்த மார்ச் 18ம் தேதி பிரதமர் மோடியின் ரோடு ஷோ நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சாய்பாபா வித்யாலயம் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்களை சீருடைகளிலேயே அழைத்துச் சென்றதாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் பள்ளி நிர்வாகத்தினருக்கு எதிராக சிறார் நீதி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அப்பள்ளியின் தலைமை ஆசிரியை புகழ் வடிவு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பிரதமர் நிகழ்ச்சி காரணமாக மாணவர்களை அழைத்துச் செல்லும்படி பெற்றோருக்கு தகவல் தெரிவித்ததாகவும், பெற்றோரால் அழைத்துச் செல்லப்படாத குழந்தைகள் மட்டுமே பேரணிக்கு சென்றதாகவும், அதற்கு எப்படி பொறுப்பேற்க முடியும் எனவும் தலைமை ஆசிரியை தரப்பில் வாதிடப்பட்டது.
இதற்கு அரசு வழக்கறிஞர் மாவட்ட குழந்தைகள் நல அதிகாரி விசாரணை நடத்திய பின் புகார் அளிக்கப்பட்டதாகவும், பிரதமர் நிகழ்ச்சியில் குழந்தைகளுடன் தலைமை ஆசிரியை உள்ளிட்ட மூன்று ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளனர். பிரதமர் பங்கேற்றது அரசு நிகழ்ச்சியாக இருந்தால் அதில் பள்ளிக்குழந்தைகள் பங்கேற்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால் அரசியல் நிகழ்வில் பள்ளிக்குழந்தைகள் பங்கேற்றது தவறு என வாதிட்டார்.
மேலும், நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் நீண்ட நேரம் குழந்தைகளை நிற்க வைத்தது, அவர்களுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் கூறினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி பிரதமர் பங்கேற்ற ரோடு ஷோ நிகழ்ச்சிக்கு பள்ளிக்குழந்தைகளை அழைத்துச் சென்றதாக பெற்றோர் யாரும் புகார் அளிக்காதபோது சிறார் நீதிச்சட்டம் எப்படி பொருந்தும்? என கேள்வி எழுப்பினார். இதுதொடர்பாக காவல்துறை தரப்பில் விளக்கமளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 8ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.