தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டிருந்த சரவணபவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபால் காலமானார். சிகிச்சை பலனளிக்காததால் மருத்துவமனையில் உயிரிழந்தார்.  
 
ஜீவஜோதி கணவர் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்ட நிலையில், தனது உடல்நிலையை காரணம் காட்டி சரணடைவதற்கு அவகாசம் கேட்டிருந்தார் ராஜகோபால். ஆனால், அவருக்கு அவகாசம் வழங்க மறுத்துவிட்ட உச்சநீதிமன்றம், உடனடியாக சரணடையும்படி உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து ராஜகோபால் ஆம்புலன்ஸ் மூலம் வந்து  சென்னை குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.  சக்கர நாற்காலியில் அழைத்துச் செல்லப்பட்ட ராஜகோபாலை நீதிபதி புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.  உடல்நிலை காரணமாக சென்னை ஸ்டாலின் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜகோபாலுக்கு அரசு மருத்துவமனை சிகிச்சையில் முன்னேற்றம் இல்லாததால் மீண்டும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற  அனுமதிக்க கோரி ராஜகோபால் மகன் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள்  ராஜகோபாலை தனியார் மருத்துவமனையில் சேர்க்க அனுமதி அளித்து உத்தரவிட்டனர். 

இதையடுத்து அண்ணாச்சி வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஐசியூவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரை டாக்டர்கள் உடனிருந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில், சரவணபவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.