ஜீவஜோதி கணவனை கடத்திக் கொலை செய்த சரவணபவன் அண்ணாச்சியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமலும், உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியும் அவரை தனியார் மருத்துவமனையில் கொண்டு செல்வதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. 

ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில், ஆயுள் தண்டனை பெற்ற சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபால் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது உடல்நலம் கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறி சிகிச்சைக்கு அனுமதிக்க நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. அவர் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்நிலையில் இவரது மகன் சரவணன், சென்னை உயர்நீதிமன்றத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதி கோரி நேற்று மனு தாக்கல் செய்தார். அதில், ‘’72 வயதான என் தந்தை ராஜகோபால் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது 2 சிறுநீரகமும் செயல் இழந்துள்ளது. படுத்த படுக்கையாக இருக்கும், அவருக்கு வலது கண் பார்வை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இடது கண்ணில் பாதியளவு பார்வை உள்ளது. பிறரது உதவி இல்லாமல், அவரால் எந்த வேலை செய்ய முடியாது எனவும் மனுவில் தெரிவித்திருந்தார். 

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.நிர்மல்குமார் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ராஜகோபாலின் உடல்நலம் குறித்து விவர அறிக்கையை இன்று தாக்கல் செய்யும்படி ஸ்டான்லி மருத்துவமனைக்கு டீனுக்கு உத்தரவிட்டனர். இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்த போது ஸ்டான்லி மருத்துவமனை டீன் அறிக்கையை சமர்ப்பித்தார். அப்போது ராஜகோபாலின் உடல்நிலை மோசமாக உள்ளதால் வேறு போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லாததால் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லலாம் என்று தெரிவித்தார். 

இந்நிலையில், ராஜகோபாலின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ரத்த அழுத்தம் குறைவாக இருப்பதால் ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.