சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே மும்முடியைச் சேர்ந்தவர் கொம்பாட்டி மணி (57). தொழிலதிபர். கடந்த 17ம் தேதி கொம்பாட்டி மணி, வேலை முடிந்து தனது பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டார். சம்பேரி பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, திடீரென ஒரு கார் எதிரே வந்து நின்றது.

அதில் இருந்து இறங்கிய ஒரு கும்பல், கொம்பாட்டி மணியை குண்டு கட்டாக தூக்கி, காரில் போட்டு கடத்தி சென்றது. இதுதொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொழில்போட்டியில்  தொழிலதிபர் கடத்தப்பட்டாரா, சொத்து தகராறா அல்லது வேறு காரணமா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் காலை, கொம்பாட்டி மணியின் தம்பி துரைராஜ் (55) என்பவரது செல்போனுக்கு, அவரது அண்ணனின் செல்போனில் இருந்து அழைப்பு வந்தது. அதில், எதிர் முனையில் பேசிய மர்மநபர்,  உன் அண்ணனை விடுவிக்க வேண்டுமானால், ரூ.1 கோடி தரவேண்டும். மீண்டும் நாங்கள் போன் செய்யும்போது, பணத்தை தயார் செய்து வைத்துக் கொள். இல்லாவிட்டால், உன் அண்ணனை உயிருடன் பார்க்க முடியாது என கூறிவிட்டு, இணைப்பை துண்டித்துவிட்டார்.

இதனால், அதிர்ச்சியடைந்த துரைராஜ், போலீசில் புகார் அளித்தார். போலீசார், அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது, சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதைதொடர்ந்து, சைபர் கிரைம் போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.