பிசியோதெரபி சிகிச்சை அளிப்பதாக கூறி, தொழிலதிபர் மனைவியிடம் ரூ.7 லட்சம் தங்க, வைர நகைகளை கொள்ளையடித்து சென்ற நர்சை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சென்னை தேனாம்பேட்டை வீனஸ் காலனியை சேர்ந்தவர் ராதா (65), தொழிலதிபர். கடந்த சில மாதங்களாக ராதா, மூட்டு வலியால் அவதியடைந்துள்ளார். இதற்காக, டாக்டரிடம் சிகிச்சை பெற்று வருகிறார். இதையொட்டி அவரை, பிசியோதெரபி சிகிச்சை எடுக்குமபடி டாக்டர் கூறியுள்ளார்.

இதனால் ராதா, தனியார் ஏஜென்சி மூலம் 10 நாட்களுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்க சவுமியா (27) என்ற நர்சை நியமித்தார். அதன்படி, நர்ஸ் சவுமியா கடந்த ஒரு வாரமாக ராதா வீட்டுக்கு சென்று பிசியோதெரபி சிகிச்சை அளித்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் ராதா வீட்டுக்கு வந்த நர்ஸ் சவுமியா, ராதாவுக்கு சிகிச்சை அளித்தார். அப்போது, ராதா அணிந்திருந்த ரூ.7 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகளை கழற்றி பீரோவில் வைத்துள்ளார். பின்னர், உடல் முழுவதும் எண்ணெய் தடவி கை, கால்களை மசாஜ் செய்துள்ளார். பிறகு ராதா குளிக்க சென்று விட்டார்.

அவர், குளித்து விட்டு வெளியே வந்து பார்த்தபோது சிகிச்சை அளித்த நர்ஸ் அங்கு இல்லை. இதையடுத்து, துணிகளை எடுக்க பீரோவை திறந்தபோது, அதில் வைத்திருந்த ரூ.7 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகள் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

தகவலறிந்து, தேனாம்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அருகு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று ஆய்வு செய்தனர். அப்போது நர்ஸ் சவுமியா, ஒருவித பதற்றத்துடன் வீட்டில் இருந்து வேகமாக வெளியே செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது.

தொடர்ந்து போலீசார், செவிலியரை பணிக்கு பரிந்துரை செய்த தனியார் ஏஜென்சி நிறுவன ஊழியர்களிடம், சவுமியா குறித்து தீவிரமாக விசாரிக்கின்றனர்.