நகைக்கடையில், வாடிக்கையாளர்கள் போல் நடித்து, ரூ.5 லட்சம் நகையை அபேஸ் செய்த 2 பெண்களை போலீசார் வலைவீசி தேடி வருகின் றனர்.

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வருண்குமார் (37). திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் நகைக்கடை நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் வருண்குமாரின் நகைக்கடைக்கு, 2 பெண்கள் நகை வாங்குவதற்காக வந்தனர். அவர்கள், பல்வேறு டிசைன்களில் உள்ள மோதிரம், கம்மல், செயின் உள்பட பல நகைகளை கேட்டனர். அதன்படி, வருண்குமார், தனது கடையில் இருந்த அனைத்து மாடல் நகைகளையும் காண்பித்தார்.

நீண்ட நேரம், நகைகளை பார்த்த 2 பெண்களும், அதில், எந்த மாடலும் பிடிக்கவில்லை என கூறிவிட்டு, அங்கிருந்து சென்றுவிட்டனர். இதையடுத்து, இரவு வியாபாரம்முடிந்ததும் வருண்குமார், கடையில் வரவு செலவு கணக்குகளை பார்த்தார். அப்போது, ரூ.5 லட்சம் மதிப்புள்ள 150 கிராம் நகை மாயமானதை கண்டு திடுக்கிட்டார்.

உடனே அவர், கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தார். அதில், நகை வாங்குவது போல் கடைக்கு வந்த 2 பெண்கள், தனது கவனத்தை திசை திருப்பி, நகைகளை திருடும் காட்சி பதிவாகியிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

புகாரின்படி கொருக்குப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி கேமரா காட்சியில் பதிவாகி உள்ள 2 பெண்களை வலைவீசி தேடி வருகின்றனர்.