ரூ.99 லட்சம் சொத்து வரி செலுத்தாத தியேட்டர் முன், மாநகராட்சி அதிகாரிகள் குப்பை லாரிகளை நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவொற்றியூர் தெற்கு மாட வீதியில் தனியார் திரையரங்கு செயல்படுகிறது. இதன் உரிமையாளர், கடந்த 1.4.2018 முதல் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய ₹5.99 லட்சம் சொத்து வரியை இதுவரை செலுத்தவில்லை. மேலும், கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து கேளிக்கை வரி செலுத்தவில்லை, என்று கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, மாநகராட்சி அதிகாரிகள் பலமுறை நோட்டீஸ் கொடுத்தும் திரையரங்கு உரிமையாளர் இதுவரை வரி செலுத்தவில்லை, என கூறப்படுகிறது. இந்நிலையில், திருவொற்றியூர் மண்டல உதவி வருவாய் அலுவலர் நிர்மலா தலைமையில் அதிகாரிகள் நேற்று காலை, குப்பை லாரிகளுடன், வரி பாக்கி செலுத்தாத திரையரங்கிற்கு வந்தனர்.

அங்கு, குப்பை லாரிகளை திரையரங்கு முன் நிறுத்தினர். அப்போது, அங்கு வந்த திரையரங்கு ஊழியர்களிடம், ‘‘வரி பாக்கியை செலுத்தும் வரை குப்பை லாரிகள் இங்குதான் நிறுத்தப்படும்,’’ என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் செய்வதறியாது திகைத்த தியேட்டர் ஊழியர்கள், காலை 11.30 மணி காட்சியை நிறுத்திவிட்டு, விரைவில் வரி பாக்கியை செலுத்துவதாக தெரிவித்தனர்.

ஆனால், அதை ஏற்காத அதிகாரிகள், ‘‘வரி பாக்கியை முழுமையாக செலுத்தினால்தான் குப்பை லாரிகளை இங்கிருந்து எடுத்துச் செல்வோம்,’’ என்று கூறி அங்கேயே முகாமிட்டனர். மேலும் வரி பாக்கி தொடர்பாக, தியேட்டர் வாசலில் நோட்டீசை ஓட்டினர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.