மாநிலங்களவையில் கேள்வி ஒன்று எழுத்து மூலமாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி அளித்த பதிலில் கூறியதாவது:

நிர்பயா நிதியுதவி திட்டத்தின் கீழ், 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளன. பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, இந்த மாநிலங்களில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. பெண்கள் மீதான பாலியல் பலாத்காரம் மற்றும் நிலுவையில் உள்ள போஸ்கோ வழக்குகளை உடனடியாக விசாரித்து, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதியை பெற்று தருவதற்காக 1,023 விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

கடந்த 2013ம் ஆண்டு நிர்பயா நிதியம் உருவாக்கப்பட்டது முதல் இன்றைய தினம் வரை, பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் 29 திட்டங்களை அமல்படுத்துவதற்காக மாநிலங்களுக்கு ரூ.2,250 கோடி வழங்கப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டு வரை பெண்கள் பாதுகாப்புக்காக ஒரே ஒரு திட்டத்துக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. அதுவும் அமல்படுத்தப்படவில்லை.

ஒரே நிதி மையத்தின் மூலமாக 33 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 2.20 லட்சம் பெண்களுக்கு இதுவரை உதவிகள் செய்யப்பட்டுள்ளது. நிர்பயா நிதியை மத்திய நிதித்துறை நேரடியாக நிர்வகிக்கிறது. அதற்கான நிதியையும் நிதித்துறையே விடுவிக்கிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை செயலாளர் தலைமையிலான கமிட்டி, நிதி வழங்குவதற்கான திட்டங்களை மட்டுமே முடிவு செய்து பரிந்துரைகள் செய்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.