செ ன்னை பாரிமுனை பகுதியில் நடந்து செல்வோர் மீது, மிளகாய்ப்பொடியைத் தூவி வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர்களை போலீசார், சுற்றி வளைத்து கைது செய்தனர்.

சென்னை பூக்கடை பகுதியில் ஏராளமான அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், வங்கிகள், பள்ளிகள், கடைகள், அலுவலகங்கள் உள்ளன. இதனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஏரளாமானோர் தினமும் வந்து செல்வது வழக்கம். இதையொட்டி இப்பகுதி பரபரப்பாக காணப்படும்.

இதையொட்டி, கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோர், நடந்து செல்வோர் மீது மிளகாய்ப்பொடியைத் தூவி, செல்போன், பணம், நகை உள்ளிட்டவற்றை மர்மநபர்கள் பறித்து செல்வதாக தொடர்ந்து போலீசாருக்கு புகார்கள் வந்தன.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர்.

இந்நிலையில், நேற்று இரவு போலீசார், என்எஸ்சி போஸ் சாலையில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, 2 வாலிபர்கள், பைக்கில் வேகமாக வந்தனர். அவர்களை, போலீசார் மறித்து நிறுத்தி விசாரித்தனர். ஆனால் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதனால் போலீசாருக்கு அவர்கள் மீது சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து போலீசார், அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று, முறைப்படி விசாரித்தனர். அதில், நாகூர் மீரான், ஆதி, கௌதம் என தெரிந்தது. மேலும் விசாரணையில், தனியாக நடந்து செல்வோரிடம் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.

தொடர்ந்து அவர்கள் கொடுத்த தகவலின்படி, அவர்களது கூட்டாளிகள் டேனியல் சாலமன், தேவராஜ், ஷாஜகான், அசாருதீன் ஆகியோரை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 பைக்குகள், அரிவாள், மிளகாய்ப்பொடி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.