தமிழ்நாட்டில் இதுவரை 1,92,574 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில், 5409 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. 1547 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ள நிலையில், 37 பேர் உயிரிழந்துள்ளனர். மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் இறப்பு விகிதம் மிகக்குறைவு. ஒரு சதவிகிதத்திற்கும் குறைவாகவே இறப்பு விகிதம் உள்ளது.

கொரோனா தமிழ்நாட்டில் உறுதியானதற்கு பிறகு, டெல்லி தப்லிஹி ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பியவர்களில் நிறைய பேருக்கு கொரோனா இருந்ததால் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தது. அதன்பிறகு சில நாட்கள் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் பாதிப்பு கட்டுக்குள் இருந்தது. ஆனால் கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிந்துவிட்டு சொந்த ஊர் திரும்பியவர்களில் நிறைய பேருக்கு கொரோனா உறுதியாவதால் கடலூர், விழுப்புரம், அரியலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த 3-4 நாட்களாக பாதிப்பு எகிறுகிறது. எனவே தப்லிஹி ஜமாத்தைவிட கடும் பாதிப்பை ஏற்படுத்திய சிங்கிள் சோர்ஸாக கோயம்பேடு மார்க்கெட் திகழ்கிறது. 

மார்ச் 7ம் தேதி தமிழ்நாட்டில் முதல் கொரோனா தொற்று உறுதியானது. அதன்பின்னர் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை எட்ட 37 நாட்கள் ஆனது. ஏப்ரல் 12ம் தேதி தான் பாதிப்பு ஆயிரத்தை தொட்டது. ஆனால் அடுத்த 16 நாட்களில் அந்த எண்ணிக்கை இரட்டிப்பாகி 2000ஐ தொட்டது. 2000 இரட்டிப்பாகி 4000ஆக எடுத்துக்கொண்ட நாட்கள் வெறும் 7 நாட்களே. ஆம்.. ஒரே வாரத்தில் 2000லிருந்து பாதிப்பு 4000ஆக அதிகரித்தது. தற்போது பாதிப்பு 5409ஆக இருக்கிறது. 

தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை அதிவிரைவாக இரட்டிப்படைவதற்கு காரணம், சென்னையில் பாதிப்பு அதிகரித்ததும் கோயம்பேட்டிலிருந்து மற்ற மாவட்டங்களுக்கு பரவியதும் பரிசோதனை எண்ணிக்கையை அதிகப்படுத்தியதும் தான். 

சென்னையிலும் அப்படித்தான். சென்னையில் முதல் பாதிப்பு உறுதியாகி, அடுத்த 43 நாட்கள் கழித்துத்தான் பாதிப்பு எண்ணிக்கை 1000ஐ தொட்டது. ஆனால் 5 நாட்களில் 2000ஐ எட்டியது குறிப்பிடத்தக்கது.