அச்சிறுப்பாக்கம் அருகே வீட்டில் திண்ணையில் தூங்கி கொண்டிருந்த ரியல் எஸ்டேட் முகவர் படுகொலை செய்யப்பட்டார்.

மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் அருகே இரும்புலி கிராமத்தை சேர்ந்தவர் கோபால் (60). இவரது மகன் யுவராஜ் (32). ரியல் எஸ்டேட் மற்றும் வீடுகள் கட்டி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு யுவராஜ், சாப்பிட்டு முடித்து, தனது வீட்டு திண்ணையில் படுத்து தூங்கினார். நேற்று அதிகாலையில் உறவினர்கள் வெளியே வந்து பார்த்தபோது, யுவராஜின் பின்பக்க தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

தகவலறிந்து அச்சிறுப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொழில் போட்டியில் யுவராஜ் கொலை செய்யப்பட்டாரா, சொத்து தகராறா, கொள்ளையடிக்க வந்த கும்பலிடம் ஏற்பட்ட மோதலில் இறந்தாரா அல்லது வேறு காரணமா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனர்.

இதற்கிடையில் போலீசார், யுவராஜ் நேற்று முன்தினம் யார் யாருடன் பேசினார். யாருடன் வழக்கமாக வெளியில் சென்று வருவர். யாருடன் செல்போனில் பேசுவார் என விசாரித்தனர்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி திமுக செயலாளர் சீனிவாசன் என்பவர் பட்டப்பகலில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதேபோன்று, கடந்த ஒரு ஆண்டுக்கு முன் அமமுக அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி செயலாளர் பாலமுருகன் காலையில் தனது டீ கடையை திறக்க வந்தபோது வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தற்போது, அச்சிறுப்பாக்கம் அருகே யுவராஜ் படுகொலையாக செய்யப்பட்டுள்ளாா.

இந்த தொடர் சம்பவங்கள் இப்பகுதியில் பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, உடனடியாக போலீசார் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்துகின்றனர்.