நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடந்த நாடாளுமன்ற தேர்தல் கடந்த 19ம் தேதி நிறைவடைந்தது. தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகின்றன. முடிவுகள் என்னவாக இருக்கும் என நாடே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. 

தமிழகத்தில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதி பொன்பரப்பி. இப்பகுதியில் மறுவாக்குப் பதிவு நடத்த ஆணையிட வேண்டும் என பொன்பரப்பி பகுதியைச் சேர்ந்த விஷ்ணுராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் டீக்காராமன், ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், “நாளை (மே 23) தேர்தல் முடிவு வெளியாக உள்ள நிலையில் மறுவாக்குப்பதிவுக்கு எப்படி உத்தரவிட முடியும்? தேர்தல் முடிவு வெளியான பின்னர் இதனை தேர்தல் வழக்காக தொடருங்கள்” என அறிவுறுத்தி மனுவை தள்ளுபடி செய்தனர். 

மனுதாரர் ஏற்கனவே இதே கோரிக்கையை தேர்தல் ஆணையத்துக்கு வைத்திருந்தார். அங்கு அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்தே அவர் நீதிமன்றத்தை நாடினார். பொன்பரப்பி பகுதியில் சமீபத்தில் இரு சமூகங்களுக்கு இடையே நிகழ்ந்த மோதல் பெரும் விவாதங்களையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்ககது.