தகவல் அறியும் உரிமை சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வருவதன்  மூலம் அழிவின் விளிம்பில் இருக்கும் அதனை அழிக்க மத்திய அரசு முயற்சிப்பதாக  ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியா காந்தி விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கடந்த 2005ம் ஆண்டு தகவல் அறியும் உரிமை சட்டம் (ஆர்டிஐ) அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் திருத்தம் செய்யும் வகையில், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்களுக்கு இடையே ஆர்டிஐ சட்டத் திருத்த மசோதா மக்களவையில் கடந்த நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது.

மத்திய, மாநில அரசுகளின் தகவல் ஆணையர்களின் ஊதியம், பணிக்காலம், இதர மானியங்கள் குறித்து மத்திய அரசு முடிவு செய்ய இந்த மசோதா வழிவகுக்கிறது.

மக்களவையில் நேற்று முன்தினம் விவாதத்திற்குப் பிறகு நடந்த வாக்கெடுப்பில் 218 வாக்குகள் ஆர்டிஐ மசோதாவுக்கு ஆதரவாகவும் 78 வாக்குகள் எதிராகவும் பதிவானதால் மசோதா நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.

இந்நிலையில், இதுதொடர்பாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த 2005ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு தற்போது அழிவின் விளிம்பில் இருக்கும் ஆர்டிஐ சட்ட மசோதாவை, மத்திய அரசு அடியோடு அழிக்க முயற்சிப்பது மிகுந்த கவலையளிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, ஆண்கள், பெண்கள் என 60 லட்சம் பேர் ஆர்டிஐ மூலம் பயனடைந்துள்ளனர். இதனால் அனைத்து நிலைகளிலும் வெளிப்படைத் தன்மை, நிர்வாகத்தில் பொறுப்புடமை என்ற புதிய கலாச்சாரம் உருவாக்கப்பட்டது. இதன் விளைவாக ஜனநாயகத்தின் அடித்தளம் அளப்பரிய அளவு வலுவடைந்தது. ஆர்டிஐ சமூக செயற்பாட்டாளர்கள் கோரிய தகவல்களினால் சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினரும் பயனடைந்தனர்.

தற்போதைய மத்திய அரசு ஆர்டிஐ சட்டத்தை இடையூறாக நினைக்கிறது. அதனால்தான், தேர்தல் ஆணையம், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்துக்கு இணையான அதிகாரங்களுடன் செயல்பட்டு வரும் மத்திய தகவல் ஆணையத்தின் அந்தஸ்தையும் சுதந்திரத்தையும் சீர்குலைக்க முயற்சிக்கிறது.

நாடாளுமன்றத்தில் தனக்கிருக்கும் பெரும்பான்மையை பயன்படுத்தி மத்திய அரசு தனது நோக்கத்தை அடைய முயற்சிக்கிறது. ஆனால், இது நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனின் அதிகாரத்தையும் உரிமையையும் பறிக்கும் செயலாகும்  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.