தமிழ்நாடா? தமிழ்நாயுடுவா? இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.. மத்திய அரசுக்கு எதிராக கொதிக்கும் ராமதாஸ்
குடியரசு தின விழாவில் பங்கேற்ற சிறந்த அலங்கார ஊர்தியை தேர்ந்தெடுக்கும் மத்திய அரசின் இணைய தளத்தில் தமிழ்நாடு என்பதற்கு தமிழ்நாயுடு என்று குறிப்பிடப்பட்டு உள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் 74வது குடியரசு தினம் கடந்த 26ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக எகிப்து அதிபர் கலந்து கொண்டார். இந்த குடியரசு தினவிழாவில் 17 மாநிலங்களின் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது. இதில், சிறந்த ஊர்தியை தேர்ந்தெடுப்பதற்கான ஆன்லைன் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மத்திய அரசின் இணைய பக்கத்தில் 17 மாநிலங்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தது. அதில், தமிழ்நாடு என்பதற்கு பதிலாக ‘தமிழ்நாயுடு’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- தில்லி குடியரசு நாள் விழா அணிவகுப்பில் பங்கேற்ற அலங்கார ஊர்திகளில் சிறந்த ஊர்தியை இணையவழி வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுப்பதற்கான மத்திய அரசின் இணையதளத்தில் (www.mygov.in) தமிழ்நாட்டின் பெயர் Tamil Naidu என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டின் பெயர் பிழையாக குறிப்பிடப்பட்டிருப்பது எழுத்துப்பிழை என்று மட்டும் கருதி கடந்து செல்ல முடியாது. அரசின் இணையதளங்கள் அரசிதழுக்கு இணையானவை. அவற்றில் சிறிய பிழை கூட நிகழ அனுமதிக்கக்கூடாது. இது உலக அரங்கில் நாட்டிற்கு அவப்பெயரைத் தேடித் தரும்.
தமிழ்நாடு பெயர் அண்மைக்காலமாக தேவையின்றி சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டு வரும் சூழலில், மத்திய அரசு இணையதளத்தில் தமிழ்நாட்டின் பெயர் தவறாக குறிப்பிடப்பட்டிருப்பது பல்வேறு வகையான ஐயங்களை ஏற்படுத்துகிறது. இந்த பிழை உடனடியாக சரி செய்யப்பட வேண்டும்.
www.mygov.in இணையதளத்தில் நடந்த இந்த பிழைக்கு அதை நிர்வகிக்கும் தேசிய தகவலியல் மையம் வருத்தம் தெரிவிக்க வேண்டும். தமிழ்நாட்டின் பெயர் பிழையாக பதிவு செய்யப்பட்டதற்கு காரணமானவர்கள் யார்? என்பது அடையாளம் காணப்பட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார்.