வங்கக் கடலின் தென்கிழக்கு பகுதியில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது கன்னியாகுமரிக்கு கிழக்கே 1,150 கி.மீ. தொலைவிலும், காரைக்காலுக்கு தென் கிழேக்கே 975 கி.மீ. தூரத்திலும் நிலை கொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறி கன்னியாகுமரி கடல் பகுதியில் நிலைக்கொள்ளும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அந்தப் புயலுக்கு புரெவி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். 
டிசம்பர் 2 முதல் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. திருவாரூர், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கனமழை பெய்யலாம் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடலில் காற்று அதிகமாக வீசக்கூடும் என்பதால், டிசம்பர் 3 வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. புயல் சின்னம் காரணமாக தூத்துக்குடி, பாம்பன் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.