காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை புரெவி புயலாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறுகையில்;- தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை புயலாக வலுவடைகிறது. நாளை மறுநாள் இலங்கையை கடந்து புயல் குமரி கடல் பகுதிக்கு நகரக்கூடும். காரைக்காலுக்கு கிழக்கு தென்கிழக்கே 975 கிலோ மீட்டர் தூரத்தில் தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.

தமிழகம், புதுச்சேரியில் இன்று சில இடங்களில் மிதமான மழை பெய்யலாம். நாளை தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

டிசம்பர் 2ம் தேதி தென்காசி, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் அதீத கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதேபோல், டிசம்பர் 3ம் தேதியும் தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் அதீத கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. டிசம்பர் 3ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.