கொரோனாவால் உயிரிழப்போர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தால் குண்டர்  சட்டத்தில் கீழ் கைது செய்யப்படுவர் என்று சென்னை காவலர் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையில் நரம்பியல் மருத்துவர் கொரோனா நோய் பாதிக்கப்பட்டு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை உயிரிழந்தார். இதையடுத்து அவரது நண்பா்கள், மாநகராட்சி ஊழியா்களுடன் மருத்துவரின் சடலத்தை அடக்கம் செய்வதற்கு, கீழ்ப்பாக்கம் நியூ ஆவடி சாலையில் உள்ள கல்லறைத் தோட்டத்துக்குக் கொண்டு சென்றனா். ஆனால், அப்பகுதி பொதுமக்கள், மருத்துவரின் சடலத்தை அடக்கம் செய்தால் அதன் மூலம் கொரோனா பரவுவதற்கு வாய்ப்பு இருப்பதாக கருதி, அதற்கு எதிா்ப்பு தெரிவித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடா்ந்து, சடலத்தை அண்ணாநகா் வேலங்காடு கல்லறை இடுகாட்டுக்கு போலீசார் கொண்டு சென்றனா். இதையறிந்த அப்பகுதி மக்களும், மருத்துவரின் உடலை அடக்கம் செய்வதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் தாக்கப்பட்டனர். பின்னர், அதிரடிப்படை போலீசார் வரழைக்கப்பட்டு பொதுமக்களை அப்புறப்படுத்தி மருத்துவர் அடக்கம் செய்யப்பட்டது. பொதுமக்களின் இந்த செயலுக்கு அனைத்து தரப்பிலும் கடும் கண்டங்கள் எழுந்தன. இதனையடுத்து, மாநகராட்சி ஊழியர்களைத் தாக்கியும், ஆம்புலன்ஸ் வாகனத்தை சேதப்படுத்தியதாகவும் 10 பிரிவுகளில் அண்ணா நகா் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த சம்பவம் தொடா்பாக 20 பேர் கைது செய்யப்பட்டனர். 90 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இதுதொடர்பாக சென்னை காவலர் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் கொரோனாவால் உயிரிழப்போர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தால் குண்டர்  சட்டத்தில் கீழ் கைது செய்யப்படுவர் என்று எச்சரித்துள்ளார்.