தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையை தகர்க்கிற பாஜக அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

மத்திய - மாநில அரசுகள் மற்றும் அதைச் சார்ந்த பல்வேறு துறைகளில் நடக்கிற எந்த நடவடிக்கையையும் சாதாரண குடிமக்கள் உரிய முறையில் விண்ணப்பித்து மிகக் குறைந்த கட்டணத்தை செலுத்தி 30 நாட்களுக்குள் தகவல் பெறுகிற உரிமையை அன்றைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு வழங்கியது.

இந்நிலையில், கடந்த நாடாளுமன்றத்தில் 2018ல் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை திருத்துகிற மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அப்போது எழுந்த கடுமையான எதிர்ப்பு காரணமாக அந்த மசோதா நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது பா.ஜ.க.வுக்கு உள்ள அசுர பலத்தினால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவுகள் 13, 16 மற்றும் 27 ல் திருத்தங்கள் கொண்டு வந்து மக்களவையில் நிறைவேற்றப்பட்டு விட்டது. இதை எதிர்த்து சோனியா காந்தி கடுமையாக மக்களவையில் உரையாற்றியிருக்கிறார்.

மாநில தகவல் ஆணையர்களின் பதவிக்காலம், ஊதியம் ஆகியவற்றையும் மத்திய அரசே நிர்ணயிக்கும் இத்திருத்தம் கூறுவதன் மூலம் மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு, கூட்டாட்சித் தத்துவம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து அ.தி.மு.க. அரசு தனது எதிர்ப்பை இதுவரை வெளிப்படுத்தவில்லை.

எனவே, இந்தியாவின் நிர்வாகத்தில் மிகப்பெரிய ஜனநாயக சீர்திருத்த நடவடிக்கையாக கருதப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையை தகர்க்கிற வகையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள திருத்தத்தை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்க்கிறது. இந்த திருத்தம் மாநிலங்களவையில் நிறைவேற்றுவதற்கான முயற்சியில் பா.ஜ.க. அரசு ஈடுபட்டிருக்கிறது. இந்நிலையில், மத்திய பா.ஜ.க. அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கையை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தகவல் அறியும் உரிமைச் சட்டத்துறை சார்பில் விரைவில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.