சொத்துக்காக பெற்ற மகனை, உருட்டுக்கட்டையால் தாய், தந்தை சரமாரியாக அடித்து கொலை செய்தனர். இச்சம்பவம் பொன்னேரி அருகே பரபரப்பை ஏற்படுத்தியது. பொதுமக்களிடம் அதிர்ச்சி உண்டானது.

திருவள்ளூர் மாவட்டம் பெரவள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களது மகன் ஹரிதாஸ். தனியார் நிறுவன ஊழியர்.

கடந்த சில மாதங்களுக்கு முன் ரவி, தனது வீட்டின் அருகில் உள்ள இடத்தில் அரசு நிதியில் தொகுப்பு வீடு கட்ட திட்டமிட்டார். ஆனால், அவரிடம் பணம் இல்லை. இதையடுத்து மகன் ஹரிதாஸ் மூலம், அவரது நண்பர்களிடம் கடன் வாங்கி, வீட்டை கட்டி முடித்தார்.

இதையடுத்து தந்தை, மகன் இடையே கடன் அடைப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்தது. அப்போது தந்தை ரவி, மகனை வீட்டை விட்டு வெளியேறும்படி கூறியுள்ளார். இதனால், அவர்களுக்குள் மேலும் மோதல் அதிகரித்து, அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார், இருவரையும் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை தொகுப்பு வீடு தொடர்பாக மீண்டும் தந்தை, மகன் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த தந்தை ரவி, தாய் விஜயலட்சுமி ஆகியோர் அங்கிருந்த உருட்டுக்கட்டையை எடுத்து ரவியை சரமாரியாக தாக்கினர். இதில், மண்டை உடைந்து அலறி துடித்தபடி அவர் மயங்கி விழுந்தார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். உடனடியாக ரத்த வெள்ளத்தில் கிடந்த ஹரிதாசை  மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஹரிதாஸ் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

புகாரின்படி கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, மகனை கொலை செய்த தந்தை ரவி, தாய் விஜயலட்சுமி ஆகியோரை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.