ஆட்டோமொபைல் துறையில் 10லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம் உள்ளதாக ஊடக அறிக்கைகள் குறிப்பிடும் நிலையில் பாஜக தலைமையிலான மத்திய அரசு மவுனம் காப்பது மிகவும் ஆபத்தானது என காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்காகாந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஆட்டோமொபைல் துறை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக ஆட்டோ மொபைல் துறையில் 10 லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம் உள்ளதாக ஏசிஎம்ஏ எனப்படும் தொழில் கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டது.

இதில் அரசு உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என இந்திய வாகன உதிரிபாக உற்பத்தியாளர் சங்க கூட்டமைப்பு வலியுறுத்தியது.

இந்நிலையில் ஊடகங்களில் வெளியான இந்த அறிக்கையை காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் சுட்டிக்காட்டி மத்திய அரசிடம் கண்டன கேள்வியை எழுப்பியுள்ளார்.

அதில்,,விற்பனை குறைந்ததால் ஆட்டோமொபைல் துறையில் 10லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயத்தில் இருக்கிறது. இதனால், உதிரிபாக தொழில் நிறுவனங்கள் அச்சத்தில் உள்ளன. ஆட்டோ மொபைல் துறையில் பணியாறும் 10 லட்சம் பேரது வேலை ஆபத்தில் உள்ளது.

இந்த துறையில் இருப்பவர்கள் வேறு இடங்களில் வேலை தேடுகின்றனர். வேலை இழப்பு, வர்த்தகத்தை பலவீனப்படுத்துதல் மற்றும் பொருளாதாரத்தை சேதப்படுத்தும் கொள்கைகள் மீதான பாஜகவின் மவுனம் மிகவும் ஆபத்தானது என குறிபிப்பிட்டுள்ளார்.

மேலும், ஆட்டொமொபைல் துறையின் வேலை இழப்பு குறித்த ஊடக அறிக்கைகளையும் இணைத்துள்ளார்.