பள்ளிகள் திறப்பது தொடர்பான  கருத்து கேட்பு கூட்டத்தில் 50 சதவீதத்துக்கும் அதிகமான பெற்றோர் பள்ளிகளை திறக்க வேண்டாம் என கருத்து தெரிவித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனையடுத்து, அக்டோபர் மாத இறுதியில் தளர்வுகளை அறிவித்த தமிழக அரசு நவம்பர் 16ம் தேதி முதல் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படும் என்று அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் நவம்பர் 9ம் தேதி தமிழ்நாடு முழுவதும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் பெற்றோர்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. 

இதில், பெரும்பாலான பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது. இதனிடையே, இந்த கருத்துக் கேட்புக் கூட்டம் அடிப்படையில் பள்ளிகள் திறப்பது குறித்து நாளை முடிவு அறிவிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை கூறுகையில்;- பள்ளிகளை திறப்பதற்கு பெரும்பாலான பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 50 சதவீதத்திற்கும் அதிகமான பெற்றோர் பள்ளிகளை திறக்க வேண்டாம் என கருத்து தெரிவித்துள்ளனர். பள்ளிகளை திறப்பது குறித்த பெற்றோரின் கருத்துகள் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக அரசே இறுதி முடிவு எடுக்கும் என தகவல் தெரிவித்துள்ளது.