காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவத்தை முன்னிட்டு, அனைத்து காவல் நிலைய போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதால், மாவட்டம் முழுவதும் காவல் நிலையங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இதையொட்டி மணல் கொள்ளை, திருட்டு, நகை பறிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மாமல்லபுரம், வண்டலூர், மதுராந்தகம், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய டிஎஸ்பி அலுவலக கட்டுப்பாட்டில் 39 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்களும், 6 அனைத்து மகளிர் காவல் நிலையங்களும், பொருளாதார குற்றப்பிரிவு, நில அபகரிப்பு பிரிவு, 15 போக்குவரத்து காவல் நிலையங்களும் உள்ளன.

தலா காவல் நிலையங்களில் 30 முதல் 35 காவலர்கள் என மொத்தம் 1500க்கு மேற்பட்ட போலீசார் பணியில் உள்ளனர்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில், கடந்த 1ம் தேதி அத்திவரதர் வைபவம் தொடங்கியது. இதையொட்டி, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக தலா காவல் நிலையத்தில் 10 பேர் என அனைத்து காவல் நிலையங்களிலும் போலீசார் அழைத்து செல்லப்பட்டனர்.

கடந்த ஒரு வாரத்துக்கு முன், அத்திவரதர் வைபவத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். பாதுகாப்பு குறைபாடு காரணத்தால் பக்தர்கள் இறந்ததாக, பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர். இதையடுத்து முதன்மை செயலாளர், டிஜிபி உள்பட அனைத்து துறை அதிகாரிகளும் அத்திவரதர் கோயில் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தனர். பின்னர் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டது.

இதைதொடா்ந்து தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான போலீசார், வரதராஜ பெருமாள் கோயில், அத்திவரதர் வைபவத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

குறிப்பாக காவல் நிலையங்களில் உள்ள பெரும்பாலான போலீசாரை, அத்திவரதர் பாதுகாப்பு பணிக்கு எஸ்பி உத்தரவின்பேரில் அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால், காவல் நிலையத்தில் டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர், எஸ்ஐக்கள் உள்பட அனைத்து போலீசாரும் சென்றுவிட்டதால், 2 பேர் மட்டும் காவல் நிலையங்களில் பணியில் உள்ளனர்.

இதனால், தினமும் காவல் நிலையங்களுக்கு வரும் புகார்களை விசாரிக்கவும், உரிய நடவடிக்கையும் எடுக்க முடியாமல் போலீசார் திணறுகின்றனர். பதிவு செய்ய வேண்டிய முக்கிய வழக்குகளும், கிடப்பில் போடப்படுகின்றன. குற்றவாளிகள், சிறையில் அடைக்கப்படுவது இல்லை.

போலீசார் பணியில் இல்லாததை பயன்படுத்தி மணல் கடத்தல், அனுமதியின்றி கூடுதல் விலைக்கு பதுக்கி வைத்து மதுபாட்டில் விற்பனை, சாராயம் விற்பனை, திருட்டு, நகை பறிப்பு உள்பட பல்வேறு குற்ற சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடக்கின்றன.

போலீசார் தரப்பிலேயே வரும் ஆகஸ்ட் 17ம் தேதி வரை, காவல் நிலையத்தில் போலீசார் இருக்க மாட்டார்கள் என கூறி வருவதால், அனைத்து குற்ற சம்பவங்களும் இரவு, பகலாக தொடர்ந்து நடக்கிறது.

குறிப்பாக காஞ்சிபுரம் தொடங்கி கல்பாக்கம் வரை பாலாற்று படுகைகளில் மாட்டு வண்டிகள் மற்றும் லாரிகளில் கனஜோராக மணல் கடத்தப்படுகிறது. ரயில் மற்றும் பஸ் நிலையங்களில், கல்லூரி பகுதிகளில் கஞ்சா விற்பனை சர்வ சாதாரணமாக விற்பனை செய்யப்படுகிறது.

எஸ்பி அலுவலகத்தில் செயல்படும் பொருளாதார குற்றப்பிரிவு, நில அபகரிப்பு பிரிவு, பாஸ்போர்ட் பிரிவு ஆகியவற்றில் போதிய போலீசார் இல்லாமல் வழக்குகள் விசாரிக்க முடியவில்லை. இதனால் புகார் கொடுத்தவர்களும், தினமும் அலைக்கழிக்கப்படுகின்றனர்.

மகளிர் காவல் நிலையங்களிலும், போலீசார் இல்லாததால் குடும்ப வழக்கு, வரதட்சனை வழக்குகளில் உரிய விசாரணை நடத்தாமல் பெண்கள் தவிக்கின்றனர்.

காலை, மாலை நேரங்களில் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலை, ஸ்ரீபெரும்புதூர் சாலை, காஞ்சிபுரம் – மதுராந்தகம் சாலை ஆகிய பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக இருந்த போலீசாரும், அத்திவரதர் வைபவத்துக்கு அனுப்பப்பட்டதால், மேற்கண்ட பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கடந்த 25 நாட்களாக காவல் நிலையங்களில் போலீசார் இருப்பதில்லை. குற்ற சம்பவங்கள் குறித்து போலீசாரை, தொலைபேசியில் தொடர்பு கொண்டால், காவல் நிலையத்தில் போலீசார் இல்லை என கூறி, இணைப்பை துண்டித்து விடுகின்றனர்.

அடிதடி, திருட்டு தொடர்பாக புகார் அளித்தால், அந்த வழக்கை விசாரிக்காமல் கிடப்பில் போட்டுவிடுகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது. காவல் நிலையங்களில் போதுமான காவலர்களை பணியில் உடனடியாக அமர்த்த வேண்டும். குற்ற சம்பவங்கள் தொடர்வதை தடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனவே, சுழற்சி முறையில் போலீசாரையும், வருவாய் துறையினரையும் அத்திவரதர் வைபவ பணியில் ஈடபட செய்ய வேண்டும். குற்ற சம்பவங்களை தடுக்கவும், விசாரிக்கவும் காவல் நிலையங்களில் போலீசரை நியமிக்க வேண்டும் என்றனர்.

இதுபற்றி போலீசாரிடம் கேட்டபோது, காவல் நிலையங்களில் உள்ள கான்ஸ்டபில் தொடங்கி ஐபிஎஸ் அதிகாரிகள் வரை அத்திவரதர் வைபவத்தில் இரவு, பகலாக பணியில் ஈடுபடுத்தப்பட்டுளள்னர். நீண்ட நேரம் பணியில் இருப்பதால், எங்களுக்கே சிரமமாக உள்ளது. மன உளைச்சலும் ஏற்படுகிறது. இதனால், மற்ற பணியில் ஈடுபட முடியவில்லை.

போலீசாருக்கு 3 நாட்களுக்கு ஒரு முறை ஷிப்ட் அடிப்படையில் பணி கொடுக்க வேண்டும். அப்போது எங்களுக்கும் ஓய்வு கிடைக்கும். பணியும் ஒழுங்காக செய்ய முடியும். காவல் நிலையத்துக்கு வரும் புகாரையும் விசாரிக்க முடியவில்லை. காவல் நிலையத்தில் பணியில் இருப்பவர்களை, பணி மாற்றம் செய்ய முடியவில்லை. விபத்து, கொள்ளை, திருட்டு சம்பவம் தொடர்பாக புகார் வந்தால், அங்கு சென்று விசாரிக்க முடியவில்லை. இதை பயன்படுத்தி குற்ற சம்பவங்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது என்றனர்.

நகா் பகுதிகளில் நடக்கும் குற்ற சம்பவங்கள், அசம்பாவிதங்கள் குறித்து உளவுப்பிரிவு போலீசார், சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு தகவல் கொடுப்பார்கள். அதன்பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்து, குற்ற சம்பவங்கள் தடுக்கப்படும். ஆனால், அத்திவரதர் வைபவத்தில் உளவுப்பிரிவு போலீசாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால், குற்ற சம்பவங்கள் குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படுவதில்லை.

 

இதேபோல் வருவாய் துறையிலும் முக்கிய அதிகாரிகள், அத்திவரதர் வைபவத்தின் பணியில் ஈடுபட்டுள்ளதால், வருவாய் துறை மற்றும் அரசு அலுவலகங்களில் பல்வேறு பணிகள் தேங்கி கிடக்கின்றன.