காஞ்சிபுரம் அருகே பெண் காவலருக்கு சக காவலர்கள் இணைந்து வளைகாப்பு செய்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது. 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி முட்டியாம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் இலக்கியா (25). இவர், செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் பெண் காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ராசு என்பவருக்கும் பெற்றோர்கள் எதிர்ப்பையும் மீறி திருமணம் நடைபெற்றது. இதனால் கடந்த ஒரு வருடமாக இரு வீட்டினரும் இருவரிடமும் பேசாமல் இருந்துள்ளனர். 

இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியான இலக்கியா வேலை பார்த்து வந்தார். மேலும் தனது குடும்ப சூழ்நிலை குறித்து சக பெண் போலீசிடம் கூறி வேதனையடைந்துள்ளார். இதனை அறிந்த செங்கல்பட்டு தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையில், பெண் போலீசார் மற்றும் காவலர்கள் 30-க்கும் மேற்பட்டோர் அனைவரும் ஆளுக்கொரு செலவை ஏற்றுக்கொண்டு தன் குடும்பத்தை சேர்ந்த சகோதரியை போல எண்ணி இலக்கியாவுக்கு பட்டுப்புடவை எடுத்து 9 வகையான சாப்பாடு போட்டு ஆரத்தி எடுத்து வளைகாப்பு கொண்டாடினர். வளைகாப்புக்கு வந்த அனைவருக்கும் காவல் நிலையம் அருகே உள்ள மண்டபத்தில் சாப்பாடு போட்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இலக்கியாவை அவருடன் பணியுரியும் அனைத்து போலீசாரும் வாழ்த்தினர். இதனை கண்ட இலக்கியா மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் வடித்தார். இந்த வளைகாப்பை அப்பகுதி பொதுமக்கள் பார்த்து நெகிழ்ந்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், இரு வீட்டினரும் ஒதுக்கியதால், நாங்களே முன்வந்து எங்களது குடும்ப நிகழ்ச்சியாக இதனை செய்தோம். அதனால் மனநிறைவு அடைந்தோம். எங்கள் தங்கைக்கு செய்ததுபோல் இந்த வளைகாப்பை செய்தோம், என்றனர்.