ஊரடங்கு மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இரண்டு கட்ட ஊரடங்கு முடிந்து, மூன்றாம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், இந்த ஊரடங்கில் சில தளர்வுகள் செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதியளித்திருந்தது. அதனால் மாநில அரசுகள் ஊரடங்கில் தளர்வுகள் செய்துள்ளன. 

மேலும் டாஸ்மாக் கடைகளை திறக்க மத்திய அரசு அனுமதியளித்த நிலையில், டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் டாஸ்மாக் கடைகள் ஏற்கனவே திறக்கப்பட்டுவிட்டன. தமிழ்நாட்டில் நாளை முதல் சென்னையை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவுள்ளன. 

சென்னையில் பாதிப்பு மிகத்தீவிரமாக உள்ளதால் தனிமனித இடைவெளியை உறுதி செய்யும் பொருட்டு சென்னையில் மதுக்கடைகள் திறக்க அனுமதியில்லை. தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும், தனிநபர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்ய வேண்டுமே தவிர மொத்த விற்பனை செய்யக்கூடாது, அடையாள அட்டையுடன் வந்து அந்தந்த பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மட்டுமே மது வாங்கவேண்டும் ஆகிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில், சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என்பதற்காக, சென்னையின் அண்டை மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்ட எல்லைகளுக்குட்பட்ட புறநகர்ப்பகுதிகளுக்கு சென்று சென்னையை சேர்ந்தவர்கள் மது வாங்கி வந்தால் கைது செய்யப்படுவார்கள் என்று சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.