தமிழ்நாடு என்றாலே செங்கோல் தான் நினைவுக்கு வரும்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு
புதிய பாராளுமன்றத்தில் செங்கோல் நிறுவியதன் மூலம் தேசத்திற்கு தமிழ் கலாச்சாரத்தின் பங்களிப்பை பிரதமர் மோடி அங்கீகரித்துள்ளார் என ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.
பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால ஆட்சியின் சாதனைகளை விளக்கும் பொதுக்கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை சென்னையில் நடந்தது. மேற்கு தாம்பரத்தில் உள்ள சண்முகம் சாலையில் நடந்த இந்தக் மாபெரும் பொதுக்கூட்டத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், "இன்று தமிழகம் என்றாலே செங்கோல் என்ற வார்த்தைதான் அனைவரின் நினைவுக்கும் வரும். இரண்டு மாதங்களுக்கு முன்பு, தமிழ்நாட்டிற்கு வெளியே யாருக்கும் செங்கோல் என்ற வார்த்தை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இன்று அனைவருக்கும் அது தெரியும். புதிய பாராளுமன்றத்தில் செங்கோல் நிறுவியதன் மூலம் தேசத்திற்கு தமிழ் கலாச்சாரத்தின் பங்களிப்பை பிரதமர் மோடி அங்கீகரித்துள்ளார்." என்றார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுப்பது குறித்தும் அதனை திமுக எதிர்ப்பது குறித்தும் குறிப்பிட்ட ராஜ்நாத் சிங், "பிரதமர் மீது எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கடுமையான தாக்குதல்கள் நடத்தி வருகின்றன. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறார். ஜனநாயகத்தை முடக்குவது பற்றிப் பேசுகிறார், புலனாய்வு அமைப்புகளின் பணிகள் குறித்து கேள்வி எழுப்புகிறார். ஊழல் வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்படுவதை முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கிறார். ஆனால் செந்தில் பாலாஜி அதிமுகவில் இருந்தபோது அவரை ஊழல்வாதி என்று கூறிய ஸ்டாலின், செந்தில் பாலாஜியை உடனடியாகக் கைது செய்யவேண்டும் என்றும் பேசினார்" என்று நினைவூட்டினார்.
"தமிழ்நாட்டில் தற்போது நடக்கும் ஆட்சியில் பெருமளவு ஊழல் நடக்கிறது. அதை நாடே அறிந்திருக்கிறது. பிற கட்சிகள் ஆட்சியைப் பிடிக்கத்தான் இருக்கின்றன. பாஜக மக்கள் வளர்ச்சிக்காக கட்சி நடத்துகிறது. பாஜகவை ஆட்சியில் அமர்த்தினால் ஊழல்வாதிகள் சிறையில் இருப்பார்கள்." என்றும் குறிப்பிட்டார்.
அதிமுகவுடனான கூட்டணி பற்றிப் பேசிய ராஜ்நாத் சிங், "முதன்முறையாக அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையில் பாஜக ஆட்சி அமைந்தபோது அவருக்கு உறுதுணையாக இருந்தவர் தமிழ்நாட்டின் மகளான ‘புரட்சித் தலைவி’ ஜெயாலலிதா என்பதை பாஜகவினர் ஒருபோதும் மறக்க முடியாது. எங்கள் கூட்டணி கட்சிகளை நாங்கள் மதிக்கிறோம். ஏனென்றால் என்டிஏ கூட்டணி கட்டாயத்தால் அமைந்தது அல்ல, அர்ப்பணிப்பினால் உருவானது" என்றார்.
ஈழத் தமிழர் விவகாரம் குறித்து கூறுகையில், "இலங்கையில் உள்ள தமிழ் அகதிகள் அமைதியுடனும், சமத்துவத்துடனும், கண்ணியத்துடனும் வாழ்வதை உறுதி செய்ய பிரதமர் மோடி தலைமையிலான அரசு உறுதிபூண்டுள்ளது. 2015ஆம் ஆண்டு பிரதமர் மோடி இலங்கை சென்றபோது, யாழ்ப்பாணத்துக்கும் சென்றார். அங்கு சென்ற முதல் இந்தியாப் பிரதமர் என்ற பெருமையையும் பெற்றார். உள்நாட்டுப் போரினால் வீடிழந்த சுமார் 27000 தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளார்." என்றார்.
தொடர்ந்து தமிழக மீனவர்கள் பிரச்சினை பற்றிப் பேசிய அமைச்சர், "தமிழகத்தில் லட்சக்கணக்கான மீனவர்கள் வாழ்கின்றனர். காங்கிரஸ் ஆட்சியில் இலங்கை ராணுவத்தால் எத்தனை மீனவர்கள் கைது செய்யப்பட்டார்கள் என்பதற்குக் கணக்கே இல்லை. ஆனால், பிரதமர் மோடி பிரதமர் ஆனதும் இலங்கையுடன் ஒரு ராஜாங்க நல்லுறவு ஏற்படுத்தப்பட்டுள்ளது." என்று தெரிவித்தார்.