காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் விழா கடந்த 1ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்கிறார்கள்.

பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் காஞ்சிபுரம் நகரம் நிரம்பி வழிகிறது. சுமார் 3 முதல் 8 மணி நேரம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் தரிசனம் செய்கிறார்கள்.

கிழக்கு கோபுரம் வழியாக பொதுதரிசனம், கிழக்கு கோபுரம் வழியாக விஐபி தரிசனம் மற்றும் ஆன்லைனில் ₹ 500 கட்டணம் செலுத்தி பதிவு செய்து சகஸ்ர நாம தரிசனம் செய்வது ஆகியவை உள்ளன. ஆனால், கூட்ட நெரிசலை பயன்படுத்தி போலி விஐபி தரிசன டிக்கெட் விற்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடியான வரிச்சூர் செல்வம், தனது நண்பர்களுடன் விஐபி  தரிசனத்தில் அத்திவரதரை தரிசனம் செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. வரிச்சூர் செல்வம் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அளிக்கப்பட்ட அளவு மரியாதையுடன் வரிச்சூர் செல்வமும் அனுமதிக்கப்பட்டு அத்திவரதரை தரிசனம் செய்துள்ளது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அதே நேரத்தில் விஐபி வரிசையில் போலீசார் குடும்பத்தினர், எந்த அனுமதிச்சீட்டும் இல்லாமல் அத்திவரதரை தரிசனம் செய்கின்றனர். மேலும் நீதித்துறை ஊழியர்கள் என பலரும் அனுமதி அட்டை இல்லாமல் விஐபி வரிசையில் சென்று அத்திவரதரை தரிசிக்கின்றனர்.

இதனால் வெளியூர், வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து அத்திவரதர் தரிசனத்துக்காக காத்துக் கிடப்பவர்களும், பொது தரிசனத்தில் அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களும் அதிருப்தியடைந்துள்ளனர்.