தமிழகத்தில், நிலத்தடி நீர்மட்டம் குறைந்த மாவட்டங்களில் பெரம்பலுார் முதலிடம் பிடித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக நிலத்தடி நீர்மட்டம் குறித்து, பொதுப்பணித் துறையின் மத்திய நிலத்தடி நீர் ஆய்வு மையம் மாதந்தோறும் ஆய்வு செய்து, அதன் அறிக்கையை அரசுக்கு அளிக்கிறது. இதில் தரைமட்டத்தில் இருந்து கிணறுகளில் நீர்மட்டம் எத்தனை மீட்டர் ஆழத்தில் இருக்கிறது என கணக்கிட்டு, அதன் அறிக்கையை தருகிறது.

அதன்படி கடந்த 2018 மே மாதம் மற்றும் இந்தாண்டு மே மாத நிலவரத்தையும் ஆய்வு செய்து, நிலத்தடி நீர்மட்டம் ஒப்பீடு செய்யப்பட்ட பட்டியல் அறிக்கை தயாரித்து வெளியிடப்பட்டுள்ளது.

அதில், தமிழகத்தின் பெரம்பலூர் அரியலூர் உள்பட 21 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. அதிகபட்சமாக பெரம்பலூரில் 52 அடி ஆழத்துக்கு நிலத்தடி நீர்மட்டம் சென்று விட்டது. கடந்த ஆண்டு 38 அடியாக இருந்து, இந்தாண்டு மேலும் 15 அடி கீழே இறங்கி 52 அடியாக உள்ளது.

பெரம்பலுார் மாவட்டத்தில் போதுமான மழை பெய்யாததும், பெய்யும் மழை நீரை சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்காததுமே நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததற்கு முக்கிய காரணம் என அதிகரிகள் கூறுகின்றனர்.