கடந்த 30 வருடங்களாக தமிழகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவே ஆட்டிப்படைத்து வரும் முக்கிய நிறுவனங்களில் பெப்ஸியும், கோக்ககோலாவும் முக்கியமானது.

நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு நிலத்தடி நீரை உறிஞ்சுவது, இந்திய குளிர்பான மார்க்கெட்டை கபளீகரம் செய்தது, அந்நிய செலாவணியை மோசடி செய்வது என நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் எதிராகவே அமைந்துள்ளது இந்த நிறுவனங்களின் நடவடிக்கைகள். பெப்ஸி, கோக் தமிழகத்தில் ஆரம்பிக்கப்பட்ட நாட்களிலேயே இருந்து பிரச்சனை தொடர்ந்து இருந்து வருகிறது. 

இந்நிலையில் தான் விழுப்புரம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய வணிக சங்கத்தலைவர் வெள்ளையன் அதிரடி கருத்துக்களை தெரிவித்தார். அதாவது உள்ளூர் பொருட்களின் சந்தையின் சீர்குலைக்கும் வகையில் நாட்டின் பொருளாதாரத்தை முடக்கும் வகையிலும் இது அமைந்துள்ளது என கூறினார். 

குறிப்பாக பெப்ஸி, கோக் நிறுவனங்களால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படுவதோடு உள்ளூர் குளிர்பான உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது வேதனை அளிப்பதாக தெரிவித்தார். இதனால் இந்தியாவில் கோக், பெய்ஸி உள்ளிட்ட வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என வெள்ளையன் தெரிவித்தார். 

இதுமட்டுமின்றி வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் தமிழகத்தில் கோக், பெப்ஸி போன்ற வெளிநாட்டு குளிர்பானங்களை விற்பதில்லை என்ற முடிவை தமிழக வணிகர் சங்க கூட்டமைப்பில் உள்ள வியாபாரிகள் முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தார். ஒருவேளை வெள்ளையன் கூற்றுப்படி பெப்ஸி, கோக் விற்பனை நிறுத்தப்பட்டால் இது உலகின் மிகப்பெரிய நிறுவனங்களான பெப்ஸி, கோக் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு பேரடி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.