கடும் குடிநீர் பஞ்சத்தால், ஒரு குடம் தண்ணீர் பிடிக்க விடிய விடிய தீப் பந்ததுடன் பொதுமக்கள் காத்துகிடக்கின்றனர். தண்ணீர் கிடைக்காமல் ராமநாதபுரம் அருகே அவலநிலை ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே, மீனங்குடி கிராமத்தில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள மக்களுக்கு அதே பகுதியி உள்ள ஊரணியில் அமைந்துள்ள கிணற்றில் இருந்து தண்ணீர் பயன்படுகிறது. தற்போது ஏற்பட்டுள்ள தண்ணீர் பஞ்சத்தால், அப்பகுதியில் விவசாய நிலங்கள் அனைத்தும், தரிசாக மாறிவிட்டன. ஆறு, குளங்கள் அனைத்தும் பாலைவனமாக காட்சியளிக்கின்றன.

இதனால், தற்போது, ஊரணியில் உள்ள கிணற்றில் தண்ணீர் எடுக்க தீப்பந்தங்களுடன் இரவிலும் மீனங்குடி மக்கள் காத்துக்கின்றனர். நீண்ட வரிசையில் காத்திருந்து ஊரணி கிணற்றில் தண்ணீர் எடுத்தால், ஒரு முறைக்கு அரை லிட்டர் தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது. இதில், ஒருகுடம் தண்ணீரை எடுக்க விடிய விடிய காத்திருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தண்ணீர் இல்லாததால் காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய்களும், தொட்டிகளும் வறண்டு காட்சியளிக்கின்றன. தண்ணீர் இறைப்பதற்காக ஊரணி கிணற்றில் வயதான பெண்கள் இறங்குகின்றனர். சிறிது தவறினாலும், நிலைதடுமாறி அவர்கள் விழுந்து எழும் சம்பவமும் அடிக்கடி நடக்கிறது.

தண்ணீர் கிடைக்காமல் தவிக்கும் மக்கள், குடிநீர் தேடுவதே அன்றாட பிழைப்பாக மாறிவிட்டது என மீனங்குடி மக்கள் வேதனையுடன் கூறுகின்றனர். மீனங்குடி சுற்றுவட்டாரத்தில் மனிதர்களுக்கே தண்ணீர் கிடைக்காத சூழ்நிலையில் அங்கு வாழும் காகம், கொக்கு, மற்றும் மயில்களும் தண்ணீருக்காக தவித்து இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.