உலகளவில் கொரோனா வைரஸ் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. மொத்தமாக பலி எண்ணிக்கை 13 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதனால் உலக நாடுகள் பீதியில் உறைந்துள்ளன. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரையில் 371 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு தனிமை சிகிச்சையில் இருக்கின்றனர். இந்தியாவில் பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ள நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனிடையே இன்று சுய ஊரடங்கு அமல்படுத்த அனைத்து மாநில அரசுகளுக்கும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியில் செல்ல வேண்டாம் எனவும் மாலை 5 மணி அளவில் மக்கள் வீட்டுக்குள் இருந்தபடியோ அல்லது பால்கனியில் நின்றபடியோ கைகளை தட்டியோ, மணி அடித்தோ கொரோனாவை ஒழிக்க பாடுபடும் ஊழியர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் தங்கள் ஆதரவை தெரிவிக்கவேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

அதன்படி நாடு முழுவதும் இன்று சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. காலையில் இருந்து மக்கள் யாரும் வெளியிடங்களுக்கு செல்லாமல் வீடுகளிலேயே முடங்கி இருக்கின்றனர். இதனிடையே இக்கட்டான சூழலில் சவாலை சிரமேற்று பணியாற்றி கொண்டிருக்கும் மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள், செவிலியர்கள், காவலர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து ஊக்கப்படுத்தும் வகையில் நாடுமுழுவதும் மக்கள் அனைவரும் மாலை 5 மணியளவில் தாங்கள் இருக்குமிடங்களில் இருந்து கைத்தட்டி நன்றியை வெளிப்படுத்தினர். குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் கைத்தட்டி கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் பணியாளர்களை உற்சாகப்படுத்தினர்.