லாஸ்ட் டைம் மாதிரி இப்போ நடத்திடக்கூடாது.. வேளச்சேரி மேல்பாலத்தில் வரிசை கட்டி நிறுத்தப்பட்ட கார்கள்.!
கடந்த 2015ம் ஆண்டு நடந்தது போல இந்த முறை நடந்துவிடக்கூடாது என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழை வெள்ளத்திற்கு அஞ்சி கார்களை அதன் உரிமையாளர்கள் வேளச்சேரி மேம்பாலத்தில் வரிசை கட்டி நிறுத்தியுள்ளனர்.
கடந்த 2015ம் ஆண்டு நடந்தது போல இந்த முறை நடந்துவிடக்கூடாது என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழை வெள்ளத்திற்கு அஞ்சி கார்களை அதன் உரிமையாளர்கள் வேளச்சேரி மேம்பாலத்தில் வரிசை கட்டி நிறுத்தியுள்ளனர்.
சென்னையில் கடந்த 2015-ம் ஆண்டு கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக தென்சென்னை பகுதிகளில் வசித்த மக்கள் வெள்ள பாதிப்பை அவ்வளவு எளிதாக மறந்துவிட மாட்டார்கள். அடையாறு ஆற்றில் திறந்து விடப்பட்ட செம்பரம்பாக்கம் ஏரி தண்ணீருடன் மழை நீரும் பெருக்கெடுத்து ஓடியதால் கரையோரங்கள் வழியாக ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் சைதாப்பேட்டை, ஜாபர்கான்பேட்டை, எம்.ஜி.ஆர். நகர், கே.கே.நகர், வடபழனி, சூளைமேடு, அசோக் நகர், தி.நகர், மேற்கு மாம்பலம் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.
இதேபோல வேளச்சேரி, தாம்பரம் சுற்று வட்டார பகுதிகளிலும் வெள்ளத்தின் பாதிப்பு அதிகமாகவே இருந்தது. 2015-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி வெளுத்து வாங்கிய மழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள் கடும் சிரமத்துக்குள்ளானார்கள். அப்போது, பலரது கார்கள் வெள்ளத்தில் சிக்கி வீணானது. இதனால், பருமழை காலத்தின் போது தங்கள் கார்களை பாதுகாப்பான இடங்களில் நிறுத்துவதை மக்கள் வாடிக்கையாக கொண்டுள்ளார்கள்.
இந்நிலையில், நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக தாம்பரம், வேளச்சேரி, ராம்நகர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மழை நீர் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. காலையிலிருந்து மழை தொடர்ந்து பெய்ததால் சாலையில் தேங்கிய மழை நீர் வடியாமல் அப்படியே நின்றது. இதனால், வாகனங்கள் ஊர்ந்து செல்வதோடு, வாகனங்கள் செல்ல ஐந்து பர்லாங் சாலையில் தடைவிதிக்கப்பட்டு போக்குவரத்து மாற்றி விடப்பட்டுள்ளது. மழை தொடர்ந்ததாலும், தண்ணீர் வடியாததாலும் தாழ்வான குடியிருப்புகளில் வசிப்போரின் கார்களை வேளச்சேரி மேம்பாலத்தின் மீது நிறுத்தி வைத்தனர். இதனால் அந்த பகுதியிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.