பல்லாவரம் அடுத்த பம்மலில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் மைத்துனரை கத்தியால் குத்திக் கொலை செய்த அக்கா கணவர் கைது செய்யப்பட்டார்.

பொழிச்சலூர், அப்துல் கலாம் தெருவை சேர்ந்தவர் முகமதுஅலீம் (37). இவர் அதே பகுதியை சேர்ந்த சித்திசாய்னுரியா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில் கடந்த இரண்டு மாதத்திற்கு முன் முகமது அலீம் தனது மாமியார் சாயென்பு என்பவருக்கு ஒரு லட்சம் ரூபாய் கடனாக கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்த பணத்தை முகமது அலீம் பலமுறை கேட்டும், சாயென்பு காலம் கடத்தி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முகமது அலீம், நேற்று முன் தினம் இரவு சாயென்பு வீட்டிற்கு சென்று, அவரை ஆபாசமாக திட்டி விட்டு, பம்மல் நல்லதம்பி சாலையில் ஆட்டோ ஸ்டாண்டர்ட் அருகே வந்து கொண்டிருந்தார். அவரை பின் தொடர்ந்து வந்த அவரது மனைவியின் தம்பியும், சாயென்புவின் மகனுமான ஒசாமாகாதர் (19) என்பவர், எப்படி எனது அம்மாவை ஆபாசமாக திட்டலாம் என்று கூறி, முகமது அலீமிடம் தகராறில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றி, கைகலப்பானது. அப்போது ஒசோமாகாதர் தான் மறைத்து கொண்டு வந்த கத்தியால் முகமதுஅலீமை குத்தினார். கத்திக் குத்து வாங்கிய முகமது அலீம் , பின்னர் சுதாரித்துக் கொண்டு, தான் ஏற்கனவே மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஒசாமாவை சரமாரியாக குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே ஒசாமா துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் கத்திக் குத்துப்பட்டு, படுகாயமடைந்த முகமது அலீமை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த சம்பவம் குறித்து அப்பகுதி பொதுமக்கள் சங்கர் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இறந்த ஒசாமா உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் கொலை வழக்குப் பதிவு செய்து முகமது அலீமை போலீசார் கைது செய்தனர்.