வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் கனமழை பெய்கிறது. அடுத்து வரும் சில தினங்களில் பருவ மழை தீவிரமடையும் என்று ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் 3 நாட்களுக்கு தமிழகத்திற்கு ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதனிடையே தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக  மத்திய நீர் வள ஆணையம் கூறியிருக்கிறது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அக்டோபர் 21 மற்றும் 22ம் தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய இருக்கிறது. தெற்கு கர்நாடகா பகுதியிலும் கனமழை பெய்யும். இதன்காரணமாக காவிரி மற்றும் கிருஷ்ணா நதிகளில் அதிகப்படியான நீர் திறக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தாழ்வான பகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள மத்திய நீர் வள ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அனைத்து அணைகளையும் தீவிரமாக கண்காணிக்கவும் தமிழகம் மற்றும் கர்நாடக அரசுகளுக்கு  அறிவுறுத்தியுள்ளது. மேலும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இரு மாநில அரசுகளை மத்திய நீர் வள ஆணையம் எச்சரித்துள்ளது.