Asianet News TamilAsianet News Tamil

வெள்ளத்தால் பேரழிவை சந்தித்துள்ள தலைநகரை தமிழ் உறவுகள் ஓடிவந்து உதவ வேண்டும் - சீமான் கோரிக்கை

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு உதவ தமிழ் உறவுகள் அனைவரும் ஓடிவந்து உதவவேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அழைப்பு விடுத்துள்ளார்.

Ntk chief coordinator seeman invite volunteers for help to chennai people for michaung cyclone affect vel
Author
First Published Dec 7, 2023, 3:26 PM IST

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “56 வருடங்கள் தொடர்ச்சியாக தமிழ் மண்ணை திராவிட கட்சிகள் ஆட்சி செய்தற்கு சாட்சியாக வழக்கம்போல இவ்வருடமும் பெருமழை வெள்ளத்தால் சென்னை மாநகரம் தத்தளிக்கின்றது. மழை நின்று முழுதாக 36 மணி நேரமாகியும் இன்னும் பல பகுதிகள் இடுப்பளவு நீரில்  மூழ்கியுள்ளன. மின்சாரம் மற்றும் தொலைதொடர்பு முற்றாகத் துண்டிக்கப்பட்டு, உதவிகூடக் கோர முடியாத உயிர் ஆபத்தான சூழலில் மக்கள் சிக்கித்தவிப்பதை காணும்போது நெஞ்சம் பதைபதைக்கின்றது.

வீட்டைவிட்டு வெளிவர முடியாமல் மாடிகளில் முடங்கியுள்ள ஆயிரக்கணக்கான மக்களை இன்னும் மீட்டபாடில்லை. பால் கிடைக்காமல் குழந்தைகளும், உணவும், குடிநீரும் கிடைக்காமல் மக்களும், மருந்துகள் கிடைக்காமல் நோயாளிகளும், முதியவர்களும்  தவித்துவருகின்றனர். வீட்டிற்குள் மழைநீர் புகுந்ததால் அத்தியாவசிய பொருட்கள் முதல் விலை உயர் மின்சாதனங்கள் வரை பழுதாகிப் பெரும் பொருளாதார இழப்பிற்கும், வேலைக்கு செல்ல முடியாமல்  வருமான இழப்பிற்கும் ஆளாகி வாழ்வாதாரம் இழந்து. சென்னை மாநகரைச் சுற்றிலும் மக்கள் அல்லலுறும் சூழல் காணப்படுவது மிகுந்த மனவேதனை அளிக்கிறது.

நெல்லை சட்டக்கல்லூரி அருகே பட்டப்பகலில் தொழிலதிபர் வெட்டி படுகொலை; போலீசார் அதிரடி விசாரணை

அடிப்படை கட்டமைப்பை ஏற்படுத்தி மழை வெள்ளத்திலிருந்து சென்னை மாநகரைக் காக்க தவறிய திராவிட மாடல் அரசு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியை வழங்குவதிலும் முற்றாகத் தோல்வியை தழுவியுள்ளது பெருங்கொடுமையாகும். இதற்கிடையே மீண்டும் சென்னையில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையத்தின் அறிவிப்பு மீண்டும் மக்களிடம் பெரும் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

இத்தகைய துயர்மிகுச் சூழலில், கடந்த 2015 ஆம் ஆண்டு பெருவெள்ள பேரழிவிலிருந்து தலைநகர் சென்னையை மீட்க எப்படி தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் மக்கள் தாமாக ஓடோடி வந்து உதவிக்கரம் நீட்டினீர்களோ, அதைப்போலவே தற்போதும் நம்மை நாமே காத்துக்கொள்ள உதவ வேண்டியதும் அவசர, அவசிய இன்றியமையாத தேவையாகும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

ஆகவே, சென்னையில் பெரும் பாதிப்புக்குள்ளாகி தவித்து நிற்கும் மக்களுக்கு, தமிழ்நாடு முழுவதுமுள்ள என் உயிருக்கினிய தாய்த்தமிழ் உறவுகள் உடனடியாக தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து கொடுத்து, பெருவெள்ள பேரழிவிலிருந்து நம் மக்களையும், தலைநகரையும் மீட்க உதவிட வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios