எந்த மாநிலத்துக்கும் மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை,’’ என்று அமைச்சர் ராவ் இந்திரஜித் சிங் தெரிவித்தார்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வந்தது. நிதி ஆயோக் அமைப்பு தொடங்கப்பட்ட பிறகு, இந்த திட்டத்தை நீக்குவதாக அறிவித்தது. ஆனாலும், ஆந்திரா, பீகார், மேற்கு வங்கம் போன்ற மாநில அரசுகள், தங்கள் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும்படி மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், காங்கிரஸ் உறுப்பினர் ரிபுன் போரா, ‘`அசாம் அல்லது பிற மாநிலங்களுக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கும் திட்டம் மத்திய அரசிடம் உள்ளதா? நிதி ஆயோக் உருவாக்கப்பட்ட பிறகு மாநிலங்களுடன் மத்திய அரசு வைத்துள்ள உறவு குறித்து அறிய விரும்புகிறேன்,’’ என்று கேட்டார்.

அதற்கு பதிலளித்த மத்திய புள்ளியல் மற்றும் திட்டமிடல் துறை இணையமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங், ‘‘எந்த மாநிலத்துக்கும் மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை. நிதி ஆயோக் அமைப்பை தொடங்கிய பிறகு, நாட்டில் கூட்டாட்சி முறை மேம்பட்டுள்ளது,’’ என்றார்.

வேலையில்லா திண்டாட்டம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் இந்திரஜித், ‘‘கடந்த மே மாதம் 30ம் தேதி அரசு முறையாக அறிவிக்கும் முன்பாக வேலைவாய்ப்பின்மை தொடர்பான தகவல் கசிந்ததை அரசு தீவிர பிரச்னையாக கருதுகிறது. இந்த தகவல் வெளியாவதற்கு பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பது குறித்து விசாரிக்கப்படும். முன்பு, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் வேலைவாய்ப்பு மற்றும் வேலையில்லா திண்டாட்டம் தொடர்பான கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. தற்போது, ஒவ்வொரு காலாண்டுக்கு ஒருமுறை இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. முந்தைய கணக்கெடுப்புக்கும், தற்போதைய கணக்கெடுப்புக்கும் சில மாற்றங்கள் இருப்பதால் இதை ஒப்பிடக் கூடாது. இதை ஒப்பிட வேண்டுமானால் அடுத்தாண்டு இதே காலாண்டில்தான் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். ஆனாலும், முன்பு இருந்தது போலவே 2.2 சதவீதம் என்ற அளவில் வேலையில்லா திண்டாடத்தின் அளவு உள்ளது,’’ என்றார்.