இரண்டு பொதுத்துறை நிறுவனங்கள் தயாரித்து வழங்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியாது,’’ என மக்களவையில் மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் தெரிவித்தார்.

சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலுக்கு முன்னதாக எதிர்க்கட்சிகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பின. மேலும், மின்னணு இயந்திரங்களுக்கு பதிலாக வாக்குச்சீட்டு முறைக்கு திரும்பவும் கோரிக்கை விடுத்தன. அதை தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்தது.

இந்நிலையில், மக்களவையில் நேற்று கேள்வி ஒன்றுக்கு மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் எழுத்துபூர்வமாக அளித்த பதில்: எந்த வெளிநாட்டு நிறுவனங்களின் தொழில் நுட்பங்களையும் இணைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தல் ஆணையம் உருவாக்கவில்லை. உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் இந்த இயந்திரங்களை பாரத் எலக்ட்ரானிக் லிமிடெட்டும் (பெல்), இந்திய எலக்ட்ரானிக்ஸ் கழகமும் உருவாக்குகின்றன. இதற்கான வழிகாட்டுதலை தேர்தல் ஆணையத்தின் தொழில்நுட்ப நிபுணர்கள் குழு வழங்குகிறது.

இந்த இயந்திரங்களில் முறைகேடு எதுவும் செய்ய முடியாது என தேர்தல் ஆணையம் பலமுறை நிருபித்துள்ளது. இதில், பல்வேறு பாதுகாப்பு அம்சங்களும் நிறைந்துள்ளதால் சுதந்திரமான நேர்மையான முறையில் தேர்தலை நடத்த முடியும்.

தேர்தல் ஆணையத்தின் தொழில்நுட்ப நிபுணர்குழு கடந்த 2007ம் ஆண்டு செய்த பரிந்துரை அடிப்படையில், கடந்த 1989-90 ல் தயாரிக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்த தகுதியற்றவை என தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விவிபேட் எனப்படும் ஒப்புகை சீட்டு இயந்திரத்துடன் இணக்கமாக செயல்படாத, கடந்த 2000 முதல் 2005 வரை தயாரிக்கப்பட்ட எம் 1 ரக வாக்குப்பதிவு இயந்திரங்களும் கடந்த 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு பின் ஒதுக்கி வைக்கப்பட்டு விட்டது.

பயன்படுத்த லாயக்கற்ற 9 லட்சத்து 30 ஆயிரத்து 430 எம் 1 ரக வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாகவும், கடந்த ஏப்ரலில் நடைபெற்ற மக்களவை தேர்தலுக்கு பயன்படுத்தவும், அப்போது நடைபெற்ற சில மாநில சட்டப்பேரவை தேர்தலில் பயன்படுத்தவும், 13.95 லட்சம் புதிய வாக்குப்பதிவு இயந்திரங்களும், 10.55 லட்சம் கட்டுப்பாட்டு இயந்திரங்களும் கடந்த 2016-2019ல் கொள்முதல் செய்யப்பட்டன என்றார்.