NIA RAID : பெங்களூர் ஓட்டல் குண்டு வெடிப்பு.. அதிகாலையிலேயே சென்னையில் களம் இறங்கிய NIA
பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே ஓட்டலில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழ்நாட்டில் என்ஐஏ சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில் 3 இடங்கள் உட்பட 5 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஓட்டல் குண்டு வெடிப்பு
பெங்களூருவில் உள்ள ராமேசுவரம் கஃபே ஓட்டலில் கடந்த 1-ம் தேதி குண்டு வெடித்தது. இதில் 10 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், என்ஐஏ போலீசார் விசாரணையில் களம் இறங்கினார். இந்த குண்டு வெடிப்பில் ஆரம்ப கட்டத்தில் குற்றவாளிகள் தொடர்பாக எந்தவித தகவலும் கிடைக்காத காரணத்தால் 10 லட்சம் ரூபாய் பரிசும் அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், தீவிரவாதியின் உருவப்படம் சிக்கியது.
ஆனால் அந்த நபர் முக்கவசம் மற்றும் தொப்பி அணிந்திருந்தார். இதனையடுத்து பல்வேறு இடங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகள் மூலம் மார்ச் 5-ம் தேதிவரை துமக்கூரு என்ற இடத்தில் இருந்த குற்றவாளி, அடுத்தடுத்து பெல்லாரி, மந்திரா லயம் ஆகிய இடங்களுக்குச் சென்றுள்ளார்.
சென்னையில் என்ஐஏ சோதனை
இதனை தொடர்ந்து மார்ச் 7-ம் தேதி கார்வார் அருகிலுள்ள கோகர்ணா பேருந்தில் பயணிப்பது சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. அன்றைய தினம் அவர் தொப்பி, கண்ணாடி அணியாமல் பயணித்தது சிசிடிவி காட்சி மூலம் உறுதியானது. அதன் பிறகு அவர் மங்களூருவை அடுத்துள்ள பட்கலுக்கு சென்றதை என்ஐஏ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
மேலும் இந்த குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 2 பேர் கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் தங்கி இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து என்ஐஏ அதிகாரிகள், சென்னையில் 3 இடங்கள் உட்பட 5 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மண்ணடி மூட்டைக்காரன் தெருவில் உள்ள அப்துல்லா என்பவர் வீட்டில் சோதனை. மேலும் முத்தியால்பேட்டை விநாயகர் கோயில் தெருவில் உள்ள ஒரு வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது
இதையும் படியுங்கள்
வெப்ப அலை எச்சரிக்கை: வாக்காளர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்!