களைகட்டிய புத்தாண்டு! சென்னையில் காலை 6 மணி வரை போக்குவரத்துக்குத் தடை!
2025 புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்காக சென்னை மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, நாளை காலை 6 மணி வரை மெரினாவுக்குச் செல்லும் பாதைகள் மூடப்பட்டுள்ளன. 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடலில் இறங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
2025 புத்தாண்டை வரவேற்க உலகம் முழுவதும் தயாராக உள்ளது. சென்னையிலும் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் புத்தாண்டு கொண்டாடத்துக்கு ஏற்படு செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் இன்று (டிசம்பர் 31) இரவு 7 மணி முதல் நாளை காலை 6 மணிவரை பல்வேறு இடங்களில் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
புத்தாண்டை கொண்டாட்டத்துக்காக மெரினா கடற்கரை முழுவதும் பொதுமக்கள் குவிந்திருக்கிறார்கள். மெரினாவில் உள்ள மணிக்கூண்டு பூக்கள் மற்றும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்கள் கடலுக்குள் செல்ல போலீசார் தடை விதித்துள்ளனர்.
இதனால், மெரினா கடற்கரைக்கு செல்லும் எல்லா பாதைகளும் மூடப்பட்டுள்ளன. மெரினா கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, முழுமையாக காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனிடையே, கடற்கரை சாலையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு வந்த மக்கள் கூட்டம் அலைபோதுகிறது.
சாலையில் ஆங்காங்கே தடுப்புகளை அமைத்து கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மெரினாவைப் போலவே சென்னை பெசண்ட் நகர் கடற்கரையிலும் புத்தாண்டை வரவேற்க வந்த மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது.
கூட்டத்தினரைக் கண்காணிக்க 300க்கும் மேற்பட்ட மாநகர போக்குவரத்து காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மெரினா கடற்கரை மற்றும் பட்டினப்பாக்கம் உட்புறச் சாலையில் நாளை காலை 6 மணி வரை போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது.