சென்னையில் உள்ள கடற்கரை சாலைகள் அனைத்தும் நாளை இரவு 10 மணியுடன் மூடப்படும். அதேபோல், நட்சத்திர ஓட்டல்களில் நாளை இரவு 10 மணிக்கு பார்களை மூடவும் காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

புத்தாண்டு அன்று ஒவ்வொரு ஆண்டும் தமிழகம் முழுவதும் உள்ள கடற்கரைகளில் மக்கள் கூட்டமாக கூடி புத்தாண்டை கொண்டாடுவார்கள். மெரினா கடற்கரையில் புத்தாண்டு அன்று நள்ளிரவில் கட்டுக்கு அடங்காத வகையில் மக்கள் கூடுவார்கள். இளைஞர்கள் அன்று இரவு நகரம் முழுவதும் இருசக்கர வாகனத்தில் வலம் வருவார்கள். அன்று சென்னை மாநகரம் தூங்கா நகராகவே காட்சி அளிக்கும். கொரோனா பரவல் முடிவுக்கு வராத நிலையில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதிலும் பொதுமக்கள் கூட்டமாக கூடினால் கொரோனா பரவல் மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதை கருத்தில் கொண்டே புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள கடற்கரை சாலைகள் அனைத்தும் நாளை இரவு 10 மணியுடன் மூடப்படும். புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை உள்ளதால் ஓட்டல்களையும் இரவு 10 மணியுடன் மூட வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நட்சத்திர ஹோட்டல், கேளிக்கை விடுதிகளில் தடையை மீறி கொண்டாட்டத்தில் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், பைக் ரேஸ் மற்றும் விபத்துக்களை தடுக்கும் விதமாக முக்கிய மேம்பாலங்களை மூடவும் காவல்துறை திட்டமிடப்பட்டுள்ளது. தடையை மீறி செல்பவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.