கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இந்தியாவை பொறுத்தமட்டில் மகாராஷ்டிரா மற்றும் கேரளா ஆகிய 2 மாநிலங்களிலுமே கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தது. 

ஆனால், டெல்லி நிஜாமுதீனில் நடந்த தப்லீகி ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்டு சொந்த மாநிலங்களுக்கு திரும்பியவர்களில் நிறைய பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுவருவதால், தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் மளமளவென கொரோனா பாதிப்பு உயர்ந்துவருகிறது. 

அதிலும் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை தாறுமாறாக எகிறுகிறது. தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்களில் 110 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியான நிலையில், இன்றைக்கு 75 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. 

டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்களில் 1103 பேரை கண்டறிந்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் 658 பேருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவு நேற்று வந்த நிலையில் அவர்களில் 110 பேருக்கு கொரோனா இருந்தது உறுதியானது. இன்றைக்கு மேலும் 75 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இந்த தகவலை தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உறுதிப்படுத்தியுள்ளார்.

இன்றைக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்ட 75 பேரில் 74 பேர் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் என்று பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 309ஆக அதிகரித்துள்ளது. இந்த 309 பேரில் 264 பேர் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்கள்.