நரேந்திர மோடி என்மீது அலாதியான பிரியம் வைத்திருப்பவர் ஆவார். முதல்வருக்கும் அலாதி பிரியம் உண்டு என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

சென்னை திருவேற்காடு ஜிபிஎன் பேலஸ் அரங்கில் பாமக நிறுவனர் ராமதாசின் பிறந்தநாள் முத்துவிழா கொண்டாடப்பட்டது. இதில் கவிதையை கவிஞர் ஜெயபாஸ்கரன் வாசித்தார். ராமதாஸ் மற்றும் அவரது மனைவி சரஸ்வதி கேக் வெட்டி முத்து விழாவை கொண்டாடினார்.

விழாவில் அன்புமணி, பாமக தலைவர் ஜி.கே.மணி, பாமக முன்னாள் தலைவர் தீரன், இடஒதுக்கீடு போராட்டத்தில் பங்கேற்ற அருள்மொழி, ஏ.கே.மூர்த்தி, கோமதி அம்மாள், சக்தி கமலாம்பாள், வேங்கைப் புலியன், நல்லி ராமநாதன், டெல்டா நாராயணசாமி, கவிஞர் ஜெயபாஸ்கரன் மற்றும் மாநில துணை பொதுச்செயலாளர் அம்பத்தூர் கே.என்.சேகர், மாநில துணை தலைவர் வ.பால (எ) பாலயோகி, நா.வெங்கடேசன், இ.தினேஷ்குமார், வக்கீல் பா.யோகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ராமதாஸ் பேசியதாவது:-

நமது வரலாறு மறைக்கப்படுகிறது. நாகப்பன் படையாச்சியின் வரலாற்றை மறைத்தவர்கள், இப்போது நமது வரலாற்றையும் மறைக்கிறார்கள். கொச்சைப் படுத்துகிறார்கள். அந்த வரலாற்றை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் தீரன் எழுத வேண்டும். தீரன் நீண்ட நாட்களுக்குப் பிறகு இங்கு வந்திருக்கிறார்.

அவரிடம் நான் கூறினேன். காலம் நம்மை பிரித்து விட்டது என்று சில சூழ்ச்சியாளர்களும் இதன் பின்னணியில் இருந்தனர். இங்கு பேசும்போது கூட அவர் உங்கள் கட்சி என்று கூறித் தான் பேசினார். இனி அவர் நமது கட்சி. நம்முடன் தான் அவர் இருப்பார்.

பிறந்த நாளை விழாவாகக் கொண்டாடும் வழக்கம் எனக்கு இல்லை. என்னுடைய 80வது பிறந்தநாள் முத்து விழாவை சிறப்பாக நடத்த வேண்டும் என்ன, பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட பல தலைவர்களை அழைத்து நடத்தலாம் என்று அன்புமணியும், ஜி.கே.மணியும் என்னிடம் கூறினார்கள்.

இப்போதுள்ள பிரதமர் நரேந்திர மோடி என்மீது அலாதியான பிரியம் வைத்திருப்பவர் ஆவார். முதல்வருக்கும் அலாதி பிரியம் உண்டு. இன்று காலையில் எனக்கு வாழ்த்துச் செய்தி, மலர்க்கொத்து கொடுத்து அனுப்பி எனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

அவ்வாறு இருக்கும் நிலையில், எனது பிறந்தநாள் விழாவில் பங்கேற்க அழைத்திருந்தால் நிச்சயமாக வந்திருப்பார்கள். ஆனால், நான்தான் என்னோடு போராடிய, சிறை சென்ற பாட்டாளிகளோடு இணைந்து விழா கொண்டாட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.

அதைத் தொடர்ந்துதான் இந்த விழா இப்படி நடக்கிறது. எதிர்காலம் பாமகவுக்குத்தான். நிச்சயம் அன்புமணி மாற்றத்தை ஏற்படுத்துவார். அதற்காக பாமகவினர் அனைவரும் உழைக்க வேண்டும். முதுமை என்னை எவ்வளவுதான் வாட்டினாலும், கோல் ஊன்றி நடந்தாலும் இந்த ஊமை ஜனங்களுக்காகவும், மக்களுக்காகவும் போராடி உயிரை விடுவேன் என்று இந்த நேரத்தில் உறுதியளிக்கிறேன்.

மேலும் தனக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன் என்றார்.