மாதவரத்தில் செல்போன் பறித்துச் சென்ற கொள்ளையர்களை இருசக்கர வாகனத்தில் துரத்திச் சென்று பிடித்த உதவி ஆய்வாளரை, காவல் ஆணையர் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார். 

சென்னையில் செல்போன் பறிப்பு சம்பவங்கள் என்பது தொடர் கதையாகி வருகிறது. இதனால் ஒரு சில சமயங்களில் செல்போன்களை பறிகொடுப்பவர்கள் உயிர் இழக்கவும் நேரிடுகிறது. போலீசாருக்கு சவால் விடும் வகையில் புது புது டெக்னிக்கை செல்போன் பறிப்பு கும்பல் பின்பற்றி வருகின்றன. இந்நிலையில், சென்னை மணலி புதுநகர் எம்எம்டிஏ காலனியில் வசிப்பவர் ரவி (56). இவர் நேற்று முன்தினம் காலை மாதவரம் மேம்பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர், அவரிடம் இருந்து செல்போனை பறித்துக்கொண்டு தப்பினர். உடனே ரவி கூச்சலிட்டுக் கொண்டே அவர்களை துரத்திச் சென்றுள்ளார்.

அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த மாதவரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரமேஷ் இதை கவனித்துள்ளார். உடனே அவர் தனது இருசக்கர வாகனத்தில் குற்றவாளிகளை துரத்திச் சென்றுள்ளார். விடாமல் சில கி.மீ. தூரம் துரத்திச் சென்ற அவர், சாஸ்திரி நகர் பிரதான சாலையில் அவர்களை மடக்கிப் பிடித்தார்.அப்போது இருவரில் ஒருவர் ஆய்வாளர் மடக்கியதும் தப்பிய நிலையில் மற்றொருவரும் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு தப்ப முயன்றார்.

இதையடுத்து கொள்ளையனின் கையில் ஆயுதம் ஏதேனும் உள்ளதா என்பதைப்பற்றியெல்லாம் சற்றும் யோசிக்காமல், அவரது பைக்கில் இருந்து அப்படியே கொள்ளையனின் ஹெல்மெட்டை இழுத்துப் பிடிக்க முயல்கிறார் உதவி ஆய்வாளர். இதையடுத்து கொள்ளையன் இருசக்கர வாகனத்தில் நிற்காமல் சென்றாலும் அவரது சட்டையையும் ஹெல்மெட்டையும் பிடித்துக் கொண்டு பின்னாலே துரத்திச் சென்று கீழே தள்ளிப் பிடித்துள்ளார் ஆண்டலின் ரமேஷ்.

 

ஒரு சினிமா காட்சிபோல் பதிவாகியுள்ள இந்த சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ள, சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்,  எந்த படத்திலிருந்தும்  இந்த காட்சி எடுக்கப்படவில்லை. நிஜ ஹீரோ சப் இன்ஸ்பெக்டர் ஆண்டலின் ரமேஷ் தனியாளாகத் துரத்திச் சென்று கொள்ளையர்களை பிடித்துள்ளார் என்றார். மேலும், கொள்ளையர்களிடம் இருந்து 11 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.