பொருளாதாரத்தில் நலிந்தோருக்கு அளிக்கப்படும் இட ஒதுக்கீடு குறித்து எதிர் கட்சிகளால் தவறான பிரசாரம் செய்யப்படுகிறது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

பாஜ உறுப்பினர் சேர்ப்பு இயக்கம்-2019 குறித்து தமிழக பாஜ முக்கிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் கமலாலயத்தில் நடந்தது. பின்னர் தமிழிசை, செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பாஜக சார்பில் உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது. பல கட்சிகளை சேர்ந்தவர்கள், பல துறைகளை சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் பாஜகவில் இணைந்து வருகின்றனர். நேற்றைய தினம் திருநெல்வேலியில் சுற்றுப்பயணம் செய்தேன். அங்கே பிரதமர் கொண்டு வந்த பல திட்டங்கள் கிராம மக்களை சென்று சேர்ந்துள்ளது.

பொருளாதாரத்தில் நலிந்தோருக்கு அளிக்கப்படும் இட ஒதுக்கீடு குறித்து எதிர் கட்சிகளால் தவறான பிரசாரம் செய்யப்படுகிறது. அடுத்த முறை என்னென்ன அவர்கள் ஆதாரங்கள் வேண்டும் என்பதை சமர்ப்பித்து விட்டார்கள் என்றால் எந்த அளவுக்கு போட்டியிருக்கிறதோ அந்த அளவுக்கு கட் ஆப் இருக்கும்.

ஆனால் எந்த விதத்திலும் 69 சதவீதத்திலோ, 27 சதவீதத்திலோ யார் யாருக்கும் கிடைக்க வேண்டிய சதவீதத்தில் எந்தவிதத்திலும் குறைபாடு கிடையாது என்பதை நாங்கள் மறுபடியும் பதிவு செய்கிறோம். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசு பொத்தாம் பொதுவாக இந்த திட்டத்தை நிறைவேற்றவில்லை.

எல்லா கல்லூரி நிறுவனங்களிலும், வேலைவாய்ப்புகளிலும் அவர்களுக்கான சதவீதத்தை அதிகரித்துவிட்டு, அதிலிருந்து கொடுங்கள் என்றுதான் சொல்லப்பட்டுள்ளது. அதனால் மத்திய அரசிடம் இருந்து நல்ல திட்டங்கள் வருவதை திசை திருப்புவதற்காக இப்படி பேசுகின்றனர்.

10 சதவீத இடஒதுக்கீட்டை நாம் பின்பற்றினால் மருத்துவ படிப்பில் 1400 இடங்கள் நமக்கு கூடுதலாக கிடைக்கும். இன்றைக்கு இருக்கிற மருத்துவ துறையில் நமக்கு 1400 இடங்கள் கூடுதலாக கிடைக்கிறது என்பது நமக்கு கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு. 69 சதவீத இட ஒதுக்கீட்டில் ஒன்று கூட குறையாதபோது ஏன் எதிர்க்கிறார்கள் என்பதுதான் எனது கேள்வி. கல்வியில் எல்லா வீட்டு குழந்தைகளுக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றார்.