பாஜக நாடாளுமன்ற குழுக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடந்தது. அதில் பேசிய மோடி, முதல்முறை தோன்றும் எண்ணமே இறுதி வரை நீடிக்கும் என்பதால், முதல் முறையாக எம்பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தங்கள் தொகுதியின் மேம்பாட்டிற்காக, உள்ளாட்சி தலைவர்களுடன் இணைந்து ஆர்வத்துடன் உழைக்க வேண்டும்.

அது போன்று, மத்திய அமைச்சர்களும் நாடாளுமன்றத்தின் அன்றாட அலுவல்களில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். அரசு பிரதிநிதிகளாகிய நீங்கள், நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது இரு அவைகளிலும் தவறாமல் பங்கு பெற வேண்டும். வர முடியாத சூழலில் அது குறித்து முன் கூட்டியே தெரியப்படுத்த வேண்டும் என்றார்.

இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறுகையில், நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு வர தவறிய அமைச்சர்கள் பற்றி பிரதமர் மோடி ஏற்கனவே அதிருப்தி தெரிவித்துள்ளார். பங்கேற்காத அமைச்சர்கள் பட்டியலை கேட்டுள்ளார்.

அதுபற்றி அறிக்கை விரைவில் அவருக்கு அனுப்பி வைக்கப்படும். அமைச்சர்கள் முறையாக கலந்து கொள்வதில்லை என புகார் தெரிவித்து, எதிர்க்கட்சி தலைவர் தனக்கு கடிதம் எழுதி இருப்பதாக பாஜக எம்பிக்கள் கூட்டத்தில் பிரதமர் தெரிவித்துள்ளதாக கூறினார்.

மேலும், நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என அவர் கூறியது எம்பிக்களுக்கு மட்டுமல்ல; அமைச்சர்களுக்கும் பொருந்தும். ஒவ்வொரு எம்பி.யும் சமுதாய பணியாக தங்கள் தொகுதியில் தொழுநோய், காசநோயை ஒழிப்பதற்கான மருத்துவமனைகளை தொடங்க வேண்டும்.

2030ம் ஆண்டிடுக்குள் காசநோயை ஒழிக்க உலக சுகாதார அமைப்பு காலக்கெடு நிர்ணயித்துள்ள போதும், மத்திய அரசு 2025ம் ஆண்டிற்குள் இவற்றை ஒழிக்க உறுதிப்பூண்டு செயல்படுகிறது,'' என்றார்.

நாடாளுமன்றத்துக்கு மத்திய அமைச்சர்கள், பாஜக எம்பி.க்கள் தவறாமல் வருவதில்லை என குற்றச்சாட்டால், பிரதமர் மோடி ஏற்கனவே கடும் அதிருப்தி தெரிவித்ந்தார். தற்போது, அவர் பட்டியல் கேட்டு உத்தரவிட்டு இருப்பது, பாஜகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.