கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த இந்தியாவில் ஊரடங்கு அமலில் உள்ளது. மார்ச் 24ம் தேதியிலிருந்து ஊரடங்கு அமலில் இருக்கிறது. மூன்றாம் கட்டமாக ஊரடங்கு மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. அதனால் அனைத்து சமூக, பொருளாதார செயல்பாடுகளும் முடங்கியுள்ளன. கடந்த சில நாட்களாகத்தான் சில தளர்வுகள் செய்யப்பட்டுள்ளன.

ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்த முடியாமல் போனது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டநிலையில், 10ம் வகுப்பு தேர்வுகளை நடத்த முடியாமல் போனது. 

10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கண்டிப்பாக நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறையும் முதல்வர் பழனிசாமியும் ஏற்கனவே திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர். எனவே தேர்வு நடப்பது உறுதி. ஆனால் கொரோனாவின் தாக்கம் குறைந்து இயல்பு நிலை திரும்பிய பின்னர் தான் தேர்வு நடத்தலாம் என்பதால் தேர்வு அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை. 

அதனால் மாணவர்களுக்கு, எப்போது தேர்வு நடத்தப்படும் என்ற கேள்வி உள்ளது. இந்நிலையில், உயர்மட்ட குழு கூட்டத்திற்கு பின் ஜூன் மாத இறுதிக்கு பிறகு 10ம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணையை அறிவிக்க முடிவு செய்திருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்துகொண்டிருந்த போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், 29 தேர்வுகள் எஞ்சியுள்ளன. அந்த எஞ்சிய 29 தேர்வுகளும் ஜூலை 1 முதல் 15ம் தேதி வரை நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு ஸ்டேட் போர்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை ஜூன் இறுதிக்கு பிறகு அறிவிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.