உலகளவில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும்  கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதுவரையில் 415 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு தனிமை சிகிச்சையில் இருக்கின்றனர். இந்தியாவில் பலி எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ள நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நேற்று இந்தியாவில் சுய ஊரடங்கு அமல்படுத்தபட்டுள்ளது. நாடு முழுவதும் ரயில் சேவை வருகிற 31ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் சேவையும் முழுமையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை ரத்து செய்யப்பட்டிருக்கும் நிலையில் மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங்கில் நிறுத்தப்பட்ட வாகனங்களை பயணிகள் எடுத்துச் செல்ல அறிவுருத்தப்பட்டுள்ளனர். இன்று மாலைக்குள் பார்க்கிங்கில் இருக்கும் வாகனங்களை எடுத்துக்கொள்ளுமாறு மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. இன்று வாகனங்களை எடுக்க இயலாதவர்கள் 31ம் தேதிக்கு பிறகு எடுத்துக்கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி தமிழகத்தில் சென்னை,காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களில் ஊரடங்கை நீட்டிக்க செய்வது குறித்து அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இதில் தலைநகர் சென்னையும் அடங்கியிருப்பதால் போக்குவரத்து முடக்கபடுமா என்கிற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஏற்கனவே ரயில் மற்றும் மெட்ரோ ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் தங்கியிருக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு கிளம்பி சென்ற வண்ணம் உள்ளனர்.

 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்து வருகின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தமிழக அரசு ஏற்கனவே 60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய நிலையில் தற்போது கூடுதலாக 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.