அவர்கள் கொரோனா பாதிப்பில் இறக்கவில்லை. மூவருமே மாரடைப்பால் இயற்கை எய்தியவர்கள். அவர்களது உடலைத் திருப்பி அனுப்பியதற்காக, அமீரக அரசு, கண்டனம் தெரிவித்து இருக்கிறது. இத்தகைய செயல், இந்தியாவில் இதுவே முதன்முறை. இதிகாட் நிறுவனம், உடல்கள் திரும்பி வந்ததற்கான கட்டணத்தையும் கேட்பதாகச் செய்திகள் வந்துள்ளன. இறந்தவர்களுக்கு வழங்க வேண்டிய இறுதி மரியாதையை இந்திய அரசு புறக்கணித்து, கேவலப்படுத்தி இருக்கிறது. இந்திய அரசின் இந்தச் செயல், உலக அளவில் தலைக்குனிவை ஏற்படுத்தி இருக்கிறது. 

துபாயில் இருந்து இந்தியாவுக்கு வந்த மூன்று பேருடைய உடலைத் திருப்பி அனுப்பியது ஈவு இரக்கம், மனிதாபிமானம் அற்ற கொடுஞ்செயல் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார். 
இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “விருதுநகர் மாவட்டம், வத்திறாயிருப்பு துரைராஜ், மார்ச் மாதம் 17- ம் தேதி துபாயில் இயற்கை எய்தினார். அவரது உடலை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்காக, துபாயில் உள்ள தமிழ் அமைப்புகள் முயற்சிகள் மேற்கொண்டன. அதில் தாமதம் ஏற்பட்டதால், எனக்குத் தகவல் தெரிவித்தனர். நான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும் துபாய் இந்தியத் தூதரகத்துக்கும் தொடர்புகொண்டேன். அடுத்த நாளே, உடலை அனுப்பி வைப்பதாகத் தகவல் வந்தது.
இதிகாட் வான் ஊர்தியின் சரக்கு வான் ஊர்தியில், துரைராஜ் உடல் சென்னைக்கு வருவதாகத் தகவல் தெரிவித்தனர். அதனால், மகராஜபுரத்தில் இருந்து துரைராஜ் உறவினர்கள், உடலைப் பெறுவதற்காக வேனில் புறப்பட்டு வந்தனர். அதற்கு வாடகையாக ரூ 35,000 பேசி இருந்தனர். திண்டிவனம் அருகில் அவர்கள் வந்துகொண்டு இருந்தபொழுது, துரைராஜ் உடல் இன்று வரவில்லை, இன்னும் இரண்டு நாள்கள் கழித்துத்தான் வரும் என்று சொன்னார்கள். எனவே, துரைராஜ் குடும்பத்தினர் சென்னை எழும்பூரில் இம்பீரியல் விடுதியில் தங்க ஏற்பாடு செய்தேன்.


இதற்கு இடையில், மீண்டும் தொடர்புகொண்ட இதிகாட் வான்ஊர்தி நிறுவனத்தார், அடுத்த இரண்டாவது நாள் வரும் என்பதற்கும் உறுதி சொல்ல முடியாது எனத் தகவல் தெரிவித்தனர். எனவே, துரைராஜ் குடும்பத்தார், நாங்கள் ஊருக்குச் செல்கிறோம், தகவல் கிடைத்தவுடன் வருகிறோம் எனக் கூறி விட்டுச் சென்றனர். இது தொடர்பாக, இதிகாட் வான் ஊர்தி நிறுவனத்திடம் மீண்டும் தொடர்புகொண்டு விளக்கம் கேட்டபோது, இந்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து ஒரு புதிய ஆணை வந்துள்ளது.
 அதன்படி, மறு உத்தரவு வரும்வரை, இறந்தவர்களின் உடல்களை இந்தியாவுக்குக் கொண்டு வரக்கூடாது என்று கூறி இருக்கிறார்கள். இன்று மாலை மூன்று உடல்கள் வருவதாக இருந்தது. இரண்டு உடல்கள்தான் வந்தன. துரைராஜ் உடலை, இந்தியத் தூதரகம் மருத்துவமனையில் இருந்து விடுவித்து, துபாயில் இதிகாட் விமான நிறுவனத்திடம் ஒப்படைத்து விட்டார்கள். ஆனால், துபாய் காவல்துறையில் இருந்து வர வேண்டிய ஒரு ஆவணம், உரிய நேரத்தில் கைக்கு வராததால், துரைராஜ் உடலை மட்டும் அனுப்பவில்லை விளக்கம் அளித்தனர்.